திருப்பதி கோயில் பிரசாதத்தில் அசுத்தத்தை புகுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்காக வெங்கடேச பெருமானிடம் தான் மன்னிப்புக் கோருவதாகவும், அதற்கு பிராயச்சித்தமாக 11 நாட்கள் விரதமிருக்கப் போவதாக அறிவித்துள்ளார் ஆந்திர பிரதேச துணை முதல்வரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவண் கல்யாண்
இது தொடர்பாக தன் எக்ஸ் வலைதளக் கணக்கில் பவன் கல்யாண் பதிவிட்டுள்ளவை பின்வருமாறு:
`நமது கலாச்சாரம், நம்பிக்கை, பக்தி ஆகியவற்றின் மையமாக விளங்கும் திருப்பதி பாலாஜி கோயில் பிரசாதத்தில் அசுத்தத்தை புகுத்த மேற்கொள்ளப்பட்ட தீய முயற்சிகளால் தனிப்பட்ட முறையில் நான் மிகவும் வேதனை அடைந்துள்ளேன். உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், நான் ஏமாற்றப்பட்டதாக மனதளவில் உணர்கிறேன்.
இந்த துக்ககரமான தருணத்தில், தன் கருணையால் நம் சனாதனியர்கள் அனைவருக்கும் வலிமையைத் தருமாறு வெங்கடேச பெருமானிடம் வேண்டிக்கொள்கிறேன். இறைவனிடம் பாவமன்னிப்பு கோர இப்போதே நான் உறுதியெடுத்துக் கொள்கிறேன். இதற்குப் பிராயச்சித்தமாக 11 நாட்கள் விரதமிருக்கப் போகிறேன்.
11 நாட்கள் விரதப் பரிகாரத்துக்குப் பிறகு அக்டோபர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் நான் திருப்பதிக்குச் செல்கிறேன். அங்கே தனிப்பட்ட முறையில் இறைவனை தரிசித்து அவரிடம் பாவமன்னிப்புக் கோர இருக்கிறேன். அதன் பிறகு என் விரதப் பரிகாரம் இறைவனுக்கு முன்பு முடிவுக்கு வரும்’ என்றார்.