
திருப்பதியில் பயன்படுத்தப்படும் நெய்யில் கலப்படத்தைக் கண்டறிய, 2 கருவிகளை வழங்கியுள்ளது தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம்.
கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சியின்போது, திருப்பதியில் பிரசாதங்கள் தயாரிக்க விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இந்த விவகாரம் தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்தது இது தொடர்பாக விளக்கமளித்த முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, `இ-டெண்டர் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெய்யை, திருமலா திருப்பதி தேவஸ்தானம் 3 முறை பரிசோதிக்கும். 3 பரிசோதனைகளில் ஒரு பரிசோதனை தோல்வி அடைந்தாலும் அது திருப்பி அனுப்பப்படும்.
கலப்பட நெய்யை ஏற்றிக்கொண்டு வரும் டேங்கர் லாரிகள், கோயிலுக்குள் செல்ல முடியாது. இந்த நடைமுறை பல ஆண்டுகாலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. 2014-2019-ல் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது 14-15 முறை நெய் டேங்கர் லாரிகள் நிராகரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன’ என்றார்.
இந்நிலையில், லட்டு உள்ளிட்ட பிரசாதங்களைத் தயாரிக்க திருப்பதியில் உபயோகப்படுத்தப்படும் நெய்யின் தரத்தை ஆய்வு செய்யும் வகையில் ரூ. 70 லட்சம் மதிப்பிலான 2 கருவிகளை தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் வழங்கியுள்ளதாக ஈடிவி பாரத் செய்தி வெளியிட்டுள்ளது.
கலப்பட நெய்யைக் கண்டறிய திருப்பதியில் போதிய வசதி இல்லாததால், தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்திடம் இருந்து அதி நவீன கருவிகள் வாங்கியதாக, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் செயல் அலுவலர் ஷியாமலா ராவ் தெரிவித்ததாக செய்தி வெளியிட்டுள்ளது ஈடிவி பாரத்.