முன்பிணை வாங்கியும் குணால் காம்ராவுக்குச் சிக்கல்!

குணால் காம்ரா மீது மேலும் சில புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்
1 min read

மஹாராஷ்டிரத்தில் குணால் காம்ராவுக்கு எதிராக மேலும் புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அரசியல் நையாண்டிகளுக்குப் பேர் போன ஸ்டாண்ட் அப் காமெடியனான குணால் காம்ரா, அண்மையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என்று பகடியாகப் பேசி கிண்டல் செய்தார். இது மஹாராஷ்டிரத்தில் பெரும் பிரச்னையாக வெடித்தது.

இதுதொடர்பாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என அரசு மற்றும் சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) தரப்பில் கோரிக்கைகள் வலுத்தன. தான் மன்னிப்புக் கேட்க மாட்டேன் என குணால் காம்ரா திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.

இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்ட குற்றவியல் அவமதிப்பு வழக்கில் குணால் காம்ராவுக்கு இரு முறை அழைப்பாணைகள் அனுப்பப்பட்டன. முதல் அழைப்பாணையைத் தொடர்ந்து, விசாரணைக்கு ஆஜராக குணால் காம்ரா சார்பில் அவகாசம் கோரப்பட்டது. இதை மும்பை காவல் துறையினர் நிராகரித்துவிட்டு இரண்டாவது அழைப்பாணையை அனுப்பினார்கள்.

இதனிடையே, 2021 முதல் தமிழ்நாட்டில் (விழுப்புரம்) குடியேறியதன் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்பிணை கோரி மனுத் தாக்கல் செய்தார் குணால் காம்ரா. இடைக்கால நிவாரணமாக ஏப்ரல் 7 வரை முன்பிணை வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இடைப்பட்ட காலத்தில் மும்பை உயர் நீதிமன்றத்தில் முறையாகப் பிணை பெற்றுக் கொள்ளும் வகையில் ஏப்ரல் 7 வரை முன்பிணை வழங்கப்பட்டது.

மஹாராஷ்டிரத்தில் பல்வேறு பகுதிகளில் குணால் காம்ரா மீது மேலும் சில புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிவசேனா சட்டப்பேரவை உறுப்பினர் முர்ஜி படேல் அளித்த புகாரின்பேரில் முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, மேலும் சில புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நாசிக்கைச் சேர்ந்த மயூர் போர்ஸ், புல்தானாவைச் சேர்ந்த சஞ்சய் புஜ்பால் மற்றும் நாசிக்கைச் சேர்ந்த சுனில் ஜாதவ் அளித்த புகார்களின் அடிப்படையில் மேலும் புதிய வழக்குகள் குணால் காம்ரா மீது பதியப்பட்டுள்ளன.

முதல் முறையாகப் பதிவான வழக்கிலிருந்து முன்பிணை பெற்றுள்ள நிலையில், புதிய வழக்குகளின் அடிப்படையில் குணால் காம்ராவுக்கு மும்பை காவல் துறையினர் அழைப்பாணையை அனுப்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in