
குணால் காம்ராவுக்கு முன்பிணை வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மஹாராஷ்டிரத்தில் பாஜக, சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஆட்சியின்போது முதல்வராக இருந்த ஏக்நாத் ஷிண்டே, இந்த ஆட்சியில் துணை முதல்வராக உள்ளார்.
அரசியல் நையாண்டிகளுக்குப் பேர் போன ஸ்டாண்ட் அப் காமெடியனான குணால் காம்ரா, அண்மையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என்று பகடியாகப் பேசி கிண்டல் செய்தார். இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வெளியானது.
அதை முன்வைத்து சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே தரப்பு) கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் குணால் காம்ராவை கடுமையாக விமர்சித்தார்கள். மேலும், சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே தரப்பு) தொண்டர்கள், மும்பையில் குணால் காம்ராவின் நகைச்சுவை அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்ற விடுதியைச் சூறையாடினர்கள். இதுதொடர்பாக, குணால் காம்ரா மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மும்பை காவல் துறையினர் இருமுறை அழைப்பாணைகள் அனுப்பின. முதல் முறையாக அனுப்பப்பட்ட அழைப்பாணைக்கு நேரில் ஆஜராக அவகாசம் வேண்டும் என்ற குணால் காம்ராவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இரண்டாவதாக அனுப்பப்பட்ட அழைப்பாணையில் மார்ச் 31-க்கு முன்பு நேரில் ஆஜராக வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனிடையே, சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்பிணை கோரி குணால் காம்ரா மனுத் தாக்கல் செய்திருந்தார். தான் மும்பையில் பிறந்தவராக இருந்தாலும் 2021-க்குப் பிறகு தமிழ்நாட்டில் (விழுப்புரம்) வசித்து வருவதால், மனுவில் அதைக் குறிப்பிட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார். சென்னை உயர் நீதிமன்றம் குணால் காம்ராவுக்கு ஏப்ரல் 7 வரை முன்பிணை வழங்கி இன்று உத்தரவிட்டது.
இடைப்பட்ட காலத்தில் மும்பை உயர் நீதிமன்றத்தில் பிணை பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக இடைக்கால நிவாரணமாக முன்பிணை வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.