தான் ஒரு ஹிந்து எதிர்ப்பாளர் என்பதை ஜெகன் மோகன் ரெட்டி நிரூபித்துவிட்டார் என்று தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளர் பட்டாபி ராம் கொம்மாரெட்டி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ளார்.
திருப்பதி லட்டு சர்ச்சையை முன்வைத்து, இன்று (செப்.27) திருப்பதி கோயிலுக்குச் செல்ல திட்டமிட்டிருந்த முன்னாள் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தன் பயணத்தை ரத்து செய்துவிட்டு, ஆளும் ஆந்திர அரசைக் கடுமையாக சாடினார்.
ஜெகன் மோகன் ரெட்டிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தெலுங்கு தேசம் கட்சியின் செய்தித்தொடர்பாளர் பட்டாபி ராம் கொம்மாரெட்டி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ளார். அவர் பேசியவை பின்வருமாறு:
`தன் திருப்பதி பயணத்தை ரத்து செய்தது மூலம், தான் ஒரு ஹிந்து எதிர்ப்பாளர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி. திருப்பதி பாலாஜியை தரிசிக்கும் முன்பு ஒரு ஆவணத்தில் அவர் கையெழுத்திட வேண்டும். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் 3 தசாப்தங்களுக்கும் மேலாக இந்த விதி அமலில் உள்ளது.
ஹிந்து அல்லாத பிற மதங்களைச் சேர்ந்தவர்கள் ஒரு ஆவணத்தில் கையெழுத்திட்ட பிறகு, சம்மந்தப்பட்ட அதிகாரியிடம் அனுமதி வாங்கிவிட்டு திருப்பதி பாலாஜியை தரிசிக்கலாம். இந்த ஆவணத்தில் கையெழுத்திடுவதில் ஜெகனுக்கு என்னதான் பிரச்னை?
டாக்டர் அப்துல் கலாம் இஸ்லாமியர் என்பதால் குடியரசுத் தலைவராக திருப்பதிக்கு வருகை தந்தபோது இந்த ஆவணத்தில் கையெழுத்திட்டார். நம் நாட்டின் பல புகழ்பெற்ற தலைவர்கள் இவ்வாறு செய்துள்ளனர். திருப்பதி பாலாஜியின் மீது நம்பிக்கையும், பற்றுதலும் இல்லாமல் அவரை தரிசித்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?
ஜெகன் அவர்களே நீங்கள் என்ன மாதிரியான நாடகங்களை நிகழ்த்த விரும்புகிறீர்கள்? நடந்த விஷயங்களுக்காக திருப்பதி பாலாஜியை தரிசித்து மன்னிப்பு கேட்கப் போவதாக நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் அந்தப் பாவத்துக்கு மன்னிப்பே கிடையாது. திருப்பதி பாலாஜி உங்களை எப்போதும் மன்னிக்கமாட்டார்’ என்றார்.