மஹாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே குறித்து பேசியதற்கு மன்னிப்புக் கேட்க மாட்டேன் என குணால் காம்ரா தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிரத்தில் பாஜக, சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஆட்சியின்போது முதல்வராக இருந்த ஏக்நாத் ஷிண்டே, இந்த ஆட்சியில் துணை முதல்வராக உள்ளார்.
அரசியல் நையாண்டிகளுக்குப் பேர் போன ஸ்டாண்ட் அப் காமெடியனான குணால் காம்ரா, அண்மையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என்று பகடியாகப் பேசி கிண்டல் செய்தார். இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வெளியானது.
அதை முன்வைத்து சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே தரப்பு) கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் குணால் காம்ராவை கடுமையாக விமர்சித்தார்கள். மேலும், சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே தரப்பு) தொண்டர்கள், மும்பையில் குணால் காம்ராவின் நகைச்சுவை அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்ற விடுதியைச் சூறையாடினர்கள்.
இதைத் தொடர்ந்து துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே குறித்து அவதூறு பேசியதாகக் குறிப்பிட்டு குணால் காம்ரா மீது வழக்கு பதியப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், "குணால் காம்ரா மன்னிப்புக் கேட்க வேண்டும்" என்றார்
குணால் காம்ரா மீது எம்ஐடிசி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. கூடுதல் விசாரணைக்காக இது கார் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.
இதனிடையே விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட குணால் காம்ரா, மன்னிப்புக் கேட்க முடியாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
"எனக்குத் தெரிந்த வரை நான் பேசியது சட்டத்துக்கு எதிரானது கிடையாது. என் மீதான சட்ட நடவடிக்கைகளுக்காக காவல் துறை மற்றும் நீதிமன்றங்களுக்கு முழு ஒத்துழைப்பைத் தருவேன். ஆனால், நகைச்சுவை மனதைப் புண்படுத்தியதற்காக நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தைச் சூறையாடியவர்கள் மீது நியாயமான முறையில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமா?
நான் மன்னிப்புக் கேட்க மாட்டேன். ஏக்நாத் ஷிண்டே (இரண்டாவது துணை முதல்வர்) குறித்து அஜித் பவார் (முதல் துணை முதல்வர்) கூறியதை தான் நான் அப்படியே பேசினேன். இந்தக் கூட்டத்துக்கு நான் அஞ்ச மாட்டேன். பிரச்னை ஓயும் வரை ஓடி ஒளியவும் மாட்டேன்" என்று குணால் காம்ரா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக மும்பை காவல் துறையினர் குணால் காம்ராவுக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளார்கள்.
குணால் காம்ராவின் கருத்துக்கு எதிர்வினை ஆற்றியுள்ள மஹாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, "பகடி செய்யும்போது அதற்கென்று அவை நாகரிகம் ஒன்று இருக்கிறது. இல்லையெனில், வினைக்கு எதிர்வினை இருக்கதான் செய்யும். பேச்சுரிமை இருக்கிறது. அதற்கென்று ஒரு எல்லையும் இருக்கிறது" என்றார் ஏக்நாத் ஷிண்டே.