
ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நூற்றாண்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சல் தலையும் நாணயமும் வெளியிடும் அவல நிலையில் இருந்து இந்தியாவை மீட்க வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
"நமது இந்தியா, அனைத்து மத மக்களுக்குமான மதச்சார்பற்ற நாடு எனும் அடிப்படைத் தத்துவத்திற்கு வித்திட்டவர் அண்ணல் காந்தியடிகள்!
மக்களிடையே வெறுப்பின் விதைகள் தூவப்பட்டு, பிரித்தாளும் சக்திகள் தலைதூக்கும் போதெல்லாம் அவற்றை எதிர்கொள்ளும் வலிமையை நமக்கு என்றும் வழங்கும் ஆற்றல் அவர்.
நம் தேசப்பிதாவைக் கொன்றொழித்த மதவாதியின் கனவுகளுக்குச் செயல்வடிவம் கொடுக்கும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நூற்றாண்டுக்கு, நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரே அஞ்சல் தலையும் நினைவு நாணயமும் வெளியிடும் அவல நிலையில் இருந்து இந்தியாவை மீட்க வேண்டும்! இதுவே காந்தியடிகளின் பிறந்தநாளில் நாட்டு மக்கள் அனைவரும் ஏற்கவேண்டிய உறுதிமொழி!" என்று முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
1925-ல் நாக்பூரில் உதயமான ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தில்லியிலுள்ள அம்பேத்கர் சர்வதச மையத்தில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் வளர்ச்சிக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு ஆற்றிய பங்களிப்பைக் கௌரவப்படுத்தும் நோக்கில் நினைவு அஞ்சல் தலை மற்றும் நாணயத்தை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, அவ்விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ஆற்றிய உரை: இங்கே க்ளிக் செய்யவும்...
Gandhi | MK Stalin | RSS | PM Modi | Narendra Modi |