
நாட்டைக் கட்டி எழுப்பும் பயணத்தில் பல தடைகளை எதிர்கொண்டபோதும் ஆர்.எஸ்.எஸுக்கு யார் மீதும் கசப்புணர்வு இருந்ததில்லை என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் எனப்படும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் 1925-ல் உருவானது. இதன் நூற்றாண்டு விழா இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. தில்லியில் நடந்த இவ்விழாவில் நாட்டின் வளர்ச்சிக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பங்கை கௌரவப்படுத்தும் விதமாக தபால் தலை மற்றும் 100 ரூபாய் நாணயத்தைப் பிரதமர் மோடி வெளியிட்டார்.
அதன் பின்னர் அவர் பேசியதாவது:-
”விஜயதசமி நன்னாள், தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியாகவும் அநீதிக்கு எதிரான நீதியின் வெற்றியாகவும் பொய்களுக்கு எதிரான உண்மையின் வெற்றியாகவும் இருளுக்கு எதிரான ஒளியின் வெற்றியாகவும் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். 100 ஆண்டுகளுக்கு முன் இந்த மகத்தான நாளில் ஆர்.எஸ்.எஸ். ஓர் அமைப்பாக நிறுவப்பட்டது. அது தற்செயல் நிகழ்வல்ல.
நதிகளின் கரைகளில் மனித நாகரிகங்கள் செழித்து வளர்வது போல, ஆர்.எஸ்.எஸ். என்ற நதியின் கரையிலும் செழுமையிலும் நூற்றுக்கணக்கான உயிர்கள் மலர்ந்து செழித்து வளர்ந்துள்ளன. இந்த அமைப்பு உருவாக்கப்பட்டதில் இருந்து நம் நாட்டைக் கட்டி எழுப்ப வேண்டும் என்ற மகத்தான குறிக்கோளை மட்டுமே பின்பற்றி வருகிறது.
இந்த அமைப்பின் நூற்றாண்டு விழாவைக் காணும் வாய்ப்பு நமக்குக் கிடைத்திருப்பது நமது தலைமுறை செய்திருக்கும் அதிர்ஷ்டம். நாட்டின் சேவைக்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் லட்சக் கணக்கான ஆர்.எஸ்.எஸ். தன்னார்வலர்களுக்கு இன்று எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று வெளியிடப்பட்டுள்ள 100 ரூபாய் நாணயத்தின் ஒரு பக்கத்தில் தேசிய சின்னமும், மறுபுறம், 'வரத முத்திரை'யில் சிங்கத்தின் மீது அமர்ந்திருக்கும் பாரத மாதாவின் உருவமும், அர்ப்பணிப்புடன் அவர் முன் வணங்கும் ஆர்.எஸ்.எஸ் சேவகர்களும் உள்ளனர். சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் நமது நாணயத்தில் பாரத மாதாவின் உருவம் இடம்பெறுவது இதுவே முதல் முறை ஆகும். இன்று வெளியிடப்பட்ட சிறப்பு அஞ்சல் தலையிலும் 1963-ல் குடியரசு தின அணிவகுப்பில் ஆர்.எஸ்.எஸ் சேவகர்கள் பெருமையுடன் பங்கேற்ற வரலாற்றுத் தருணம் இடம்பெற்றுள்ளது.
நாட்டுக்காக ஆர்.எஸ்.எஸ். தன்னை அர்ப்பணித்துக்கொண்ட பயணத்தில் பலமுறை சதிகளால் குறிவைக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பை நசுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நாம் தற்செயலாக நாக்கைக் கடித்துக் கொள்வதனால் பற்களை உடைத்துவிட வேண்டும் என்பது அல்ல. அதேபோல், பல தடைகளை விதித்தாலும், ஆர்.எஸ்.எஸுக்கு யார் மீது கசப்புணர்வு இருந்ததில்லை. ஏனென்றால் ஆர்.எஸ்.எஸ். சேவகர்கள் தங்களைச் சமூகத்திலிருந்து வேறுபட்டவர்களாகக் கருதியதில்லை. அரசியலமைப்பின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையைக் கொண்டவர்கள் ஆர்.எஸ்.எஸ் சேவகர்கள்.
1984-ல் சீக்கிய படுகொலையின் போது, பல குடும்பங்கள் ஆர்.எஸ்.எஸ் சேவகர்களின் வீடுகளில் தஞ்சம் புகுந்தன. இதுதான் ஆர்.எஸ்.எஸ். சேவகர்களின் இயல்பு. முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, நாக்பூருக்குச் சென்றிருந்தபோது ஆர்.எஸ்.எஸ்ஸின் எளிமை மற்றும் அர்ப்பணிப்பால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். பஞ்சாப் வெள்ளம் மற்றும் இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் மற்றும் வயநாட்டைத் தாக்கிய துயரங்களின் போது, முதலில் சென்று உதவி வழங்கியவர்கள் ஆர்.எஸ்.எஸ். சேவகர்களே. கோவிட் தொற்றுநோய் காலத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸின் துணிச்சலையும் சேவையையும் உலகம் கண்டது.
வேற்றுமையில் ஒற்றுமை என்பதே எப்போதும் இந்தியாவின் ஆன்மாவாக இருந்து வருகிறது. இந்த வலிமை உடைந்தால், இந்தியா பலவீனமடையும். சமூக நல்லிணக்கம் ஊடுருவல்காரர்களால் பெரிய அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது. இதனால் நமது உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் எதிர்காலத்தைப் பற்றிய கேள்வி எழுகிறது. நாம் விழிப்புடன் இருந்து இந்த சவாலை எதிர்த்துப் போராட வேண்டும்.”
இவ்வாறு பேசினார்.