
உலகின் மிக வயதான மராத்தான் ஓட்டப்பந்தய வீரரான ஃபவுஜா சிங் 114 வயதில் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் சாலை விபத்தில் மரணமடைந்தார். திங்கள்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் அடையாளம் தெரியாத வாகனம் ஃபவுஜா சிங் மீது மோதியுள்ளது. சாலையைக் கடக்கும்போது, விபத்து நேர்ந்ததாகச் செய்தி வெளியாகியுள்ளது.
இவருடைய சுயசரிதையை எழுதிய குஷ்வந்த் சிங் ஃபவுஜா சிங் மறைவு பற்றி எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். ஜலந்தரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஃபவுஜா சிங் கொண்டு செல்லப்பட்டுள்ளார். இருந்தபோதிலும், காயம் காரணமாக அவர் உயிரிழந்துள்ளார். ஃபவுஜாவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஃபவுஜா சிங் மீது மோதிய கார், விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. விபத்தை ஏற்படுத்தியது யார் என்பதைக் கண்டறியும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வந்தார்கள்.
இந்நிலையில் கனடாவில் வசித்து வரும் இந்தியரான அம்ரித்பால் சிங் தில்லான் என்ற இளைஞர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஃபவுஜா சிங் மீது மோதிவிட்டு காரை நிறுத்தாமல் சென்றது இவர் என்பதைக் காவல் துறையினர் கண்டறிந்துள்ளார்கள்.
அம்ரித்பால் ஜலந்தரைச் சேர்ந்தவர். தனது தாய் மற்றும் மூன்று சகோதரிகளுடன் இவர் கனடாவில் வசித்து வருகிறார். தந்தையின் மறைவைத் தொடர்ந்து, 8 ஆண்டுகளுக்கு முன் கனடாவுக்குப் புலம்பெயர்ந்துள்ளார். ஆண்டுதோறும் இந்தியாவுக்கு வரும் இவர், கடந்த ஜூன் 23-ல் வீட்டை சரி செய்வதற்காக இந்தியா வந்துள்ளார்.
மேலும் படிக்க: மறைந்தார் மாரத்தான் தாத்தா: யார் இந்த ஃபவுஜா சிங்?
குற்றவாளியைக் கண்டுபிடித்தது எப்படி?
குற்றவாளியைக் கண்டுபிடித்தது தொடர்பாக காவல் துறை சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. ஃபவுஜா சிங் மதிய உணவு அருந்திவிட்டு நடைப்பயிற்சி மேற்கொள்வதற்காக வீட்டைவிட்டு சென்றிருக்கிறார். வீட்டிலிருந்து 120 மீட்டர் தொலைவில் பிற்பகல் 3.08 மணிக்கு டொயோடா ஃபார்ச்சூனர் கார் இடித்துள்ளது. விபத்து நடந்த இடத்திலிருந்து காரின் லைட் கண்ணாடி துகள்களைக் கொண்டு இது டொயோடா ஃபார்ச்சூனர் கார் என்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள்.
பிறகு, விபத்து நடந்த நேரத்தைக் கொண்டு சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விபத்தை உண்டாக்கிய காரை கண்டறிந்துள்ளார்கள். விசாரணையில், வரிந்தர் சிங் என்பவரது பெயரில் கார் பதிவாகியிருந்தது. ஆனால், வரிந்தர் சிங் என்பவர் காரை ஏற்கெனவே அம்ரித்பால் என்பவரிடம் விற்றுவிட்டதாகக் கூறியிருக்கிறார்.
இதன் அடிப்படையிலேயே அம்ரித்பால் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்தை உண்டாக்கிய அச்சத்தில் காரை நிறுத்தாமல் சென்றதாக, விசாரணையின்போது அம்ரித்பால் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Hit and Run Case | Hit and Run | Fauja Singh