
உலகின் மிக வயதான மராத்தான் ஓட்டப்பந்தய வீரரான ஃபவுஜா சிங் 114 வயதில் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் சாலை விபத்தில் மரணமடைந்தார்.
திங்கள்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் அடையாளம் தெரியாத வாகனம் ஃபவுஜா சிங் மீது மோதியுள்ளது. சாலையைக் கடக்கும்போது, விபத்து நேர்ந்ததாகச் செய்தி வெளியாகியுள்ளது.
இவருடைய சுயசரிதையை எழுதிய குஷ்வந்த் சிங் ஃபவுஜா சிங் மறைவு பற்றி எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். ஜலந்தரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஃபவுஜா சிங் கொண்டு செல்லப்பட்டுள்ளார். இருந்தபோதிலும், காயம் காரணமாக அவர் உயிரிழந்துள்ளார். ஃபவுஜாவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
யார் இந்த ஃபவுஜா சிங்?
89 வயதில் மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் ஓடத் தொடங்கிய ஃபவுஜா சிங் 101 வயதில் மாரத்தான் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார். நம்ப முடிகிறதா? அவர் தான் ஃபவுஜா சிங்.
60, 70 வயதுக்குப் பிறகு நம்மால் ஒழுங்காக நடக்க முடியுமா என்பதே சந்தேகம்தான். ஆனால், லண்டன் வாழ் இந்தியரான ஃபவுஜா சிங், 89 வயதுக்குப் பிறகு தான் மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்ளத் தொடங்கியிருக்கிறார். தன்னுடைய 101வது வயதில் மாரத்தான் போட்டியிலிருந்து அவர் ஓய்வு பெற்றிருக்கிறார்!
நம்பவேமுடியவில்லை இல்லையா! உலகில் இத்தனை முதிய வயதில் யாருமே மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டது கிடையாது. உலகம் முழுக்க உள்ள ஊடகங்களில் இவரைப் பற்றிய செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. யார் எப்போது பேட்டி கேட்டாலும், டர்பனும் நீண்ட தாடியுமாக ஜம்மென்று பஞ்சாபியில்
பேட்டிகளை அளித்திருக்கிறார். (பயிற்சியாளரும் மொழிபெயர்ப்பாளருமான ஹர்மந்தர் சிங்கின் உதவியோடு. இங்கிலாந்தில் வசித்தாலும் ஃபவுஜாவுக்கு ஆங்கிலம் தெரியாது.)
இத்தனைக்கும் ஃபவுஜா சிங், சிறிய வயதில் எந்தவொரு ஓட்டப்பந்தயத்திலும் கலந்துகொண்டதில்லை. கிட்டத்தட்ட 90 வயதுக்குப் பிறகுதான் இவருக்கு ஓட்டப்பந்தயத்தின்மீது காதல் வந்தது. உண்மையில், பெரிய சோகத்திலிருந்து இவரை மீட்டுக்கொண்டு வந்ததே அதுதான்.
ஃபவுஜா சிங், பஞ்சாப் ஜலந்தரில் பிறந்தவர். இன்று இந்த ஓட்டம் ஓடுபவர், குழந்தைப் பருவத்தில், 5 வயதுவரை நடக்கத் தெரியாமல் இருந்திருக்கிறார். பள்ளி வயதிலும் மற்ற மாணவர்கள் போல சரியாக நடந்ததில்லை. பள்ளிப் படிப்புக்கு பிறகு, விவசாயத்தில் முழுக் கவனமும் செலுத்தியபடி வாழ்க்கையை நிம்மதியாகக் கழித்து வந்தார். 1990களில் மனைவி, மகன், மகள் ஆகிய மூவரையும் பறிகொடுத்தபோது தான் மிகவும் துவண்டுபோனார் ஃபவுஜா சிங்.
இனி வாழ்க்கையில் எதுவும் இல்லை என்று இருந்தவரை லண்டனுக்கு அழைத்தார் அவருடைய இளைய மகன் சிக்ஜிந்தர் சிங். மன மாற்றத்துக்காக 1995ல் லண்டனுக்குச் சென்றார். சீக்கியர்கள் பலரின் நட்பு கிடைத்தது. சீக்கியர்கள் ஓட்டப்பந்தயத்தில் உற்சாகமாக ஈடுபடுவதைப் பார்த்த ஃபவுஜாக்கும் அதில் ஆர்வம் வந்தது. மாரத்தானில் கலந்துகொள்ளும் சீக்கிய நண்பர்களும் ஃபவுஜாவுக்கு உற்சாகம் கொடுத்தார்கள். 2000ம் ஆண்டில், 89வது வயதில், ஒரு சமூகச் சேவை நிறுவனத்துக்காக முதல்முதலாக மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டார். அதுதான் அவருடைய வாழ்க்கையின் மிகப்பெரிய திருப்பமாக அமைந்தது. 6 மணி நேரம் ஓடி முடித்தபிறகு மனம் சந்தோஷத்தில் துள்ளவே, உடனே ஒரு புதிய அத்தியாயத்துக்குத் தயாரானார்.
ஃபவுஜாவின் வயதில் பாதி இருக்கும் ஹர்மந்தர் சிங்தான் அவருடைய பயிற்சியாளர். 'இன்று 10 கி.மீ. ஓடலாம் என்றால், ஏன் 20 கீ.மீ. ஓடலாமே
என்பார். அவர், சர்வசாதாரணமாக 20 கிமீ ஓடக்கூடியவராக இருந்திருக்கிறார். மாரத்தான் என்பது 26 கி.மீ. அல்ல, 24 மைல்கள் (42 கி.மீ.) என்பதை அறிந்துகொண்ட பிறகுக் கடுமையாகப் பயிற்சி எடுக்க ஆரம்பித்தார்.
101 வயதில் ஓய்வுபெற்றபோது 9 முறை, 6 மணி நேரம் ஓடக்கூடிய 42 கி.மீ. மாரத்தான் போட்டிகளில் கலந்துகொண்டிருந்தார் ஃபவுஜா சிங். உலகில் 100 வயதுடைய ஒருவர் மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டதே இல்லை. அந்தச் சாதனையை 2011ல் அடைந்தார். ஆனால், ஃபவுஜா சிங்கின் இந்தச் சாதனையைப் பதிவு செய்ய கின்னஸ் மறுத்து விட்டது. முறையான பிறப்புச் சான்றிதழ் இல்லாததால். (பாஸ்போர்ட் பிறந்தநாள் - 01-04-1911).
இவர் 101வது வயதில் ஹாங்காங்கில் கலந்துகொண்ட மாரத்தான் போட்டியில், 10 கி.மீ. தூரத்தை 1 மணி நேரம் 32 நிமிடங்களில் ஓடிமுடித்து ஓய்வு பெற்றிருக்கிறார். ஓட்டப்பந்தயங்களில் இவர் கடைசியாக எல்லாம் வரமாட்டார். எப்படியும் இவருக்குப் பின்னால் பல இளைஞர்கள், நடுத்தர வயதினர் தாமதமாக ஓடிவருவதைக் காணமுடியும். மாரத்தானில் சம்பாதித்த அனைத்தையும் தொண்டு நிறுவனங்களுக்கு அளித்திருக்கிறார். 2004ல் டேவிட் பெக்கம், முகமது அலி ஆகியோருடன் இணைந்து அடிடாஸ் விளம்பரத்தில் நடித்தார். Turbaned Tornado என்கிற பெயரில் இவருடைய வாழ்க்கை வரலாறு வெளிவந்திருக்கிறது.
ஃபிட்னஸ் ரகசியம்?
பெரிய ரகசியங்கள் கிடையாது. மது, சிகரெட் பழக்கம் அறவே இல்லை. சுத்தச் சைவம். அரிசி மற்றும் எண்ணெய் கலந்த உணவுகளைத் தொடுவது கிடையாது. எண்ணெயில்லாத கோதுமை ரொட்டி (புல்கா), பருப்பு, தயிர், பச்சைக் காய்கறிகள் - இவைதான் ஃபவுஜா சிங்கின் உணவுமுறையாக இருந்துள்ளன. எதையும் குறைவாகச் சாப்பிடுவார். தினமும் மிக நீண்ட தூரம் (16 கி.மீ) நடை பயில்வது இவரது வழக்கம். வயிறு முட்ட உண்ண மாட்டார்.
"நிறைய சிரிப்பேன், எதற்கும் பதற்றப்பட மாட்டேன். சந்தோஷமாக இருப்பவர்களுக்குச் சாவு அவ்வளவு சுலபத்தில் நெருங்காது. இன்றைய தலைமுறையினர் ஜிம்முக்குப் போவதை விடவும் தினமும் தனிப்பட்ட முறையில் உடற்பயிற்சிகள் செய்வதும் சரியான உணவு முறைகளை மேற்கொள்வதுதான் அவர்களுக்குத் தேவை. இடைவிடாத உடற்பயிற்சிகளால் எந்த நோயையும் விரட்டமுடியும். சரியாக செரிக்காத உணவுகளை ஏன் சாப்பிடுகிறீர்கள்? உலகில் ஒரு பக்கம் பசிக்கொடுமையால் மக்கள் சாகிறார்கள். மறுபக்கம், கண்டதையும் சாப்பிட்டு இறக்கிறார்கள். நம் உடலுக்கு எது தேவைப்படுகிறதோ அதை மட்டும் சாப்பிட்டாலே போதும்." என்று வாழும்போது உணவுக் கட்டுப்பாட்டுடன் வாழ்ந்திருக்கிறார்.
மாரத்தான் காலத்தில் நல்ல உடல் தகுதியோடு இருந்தாலும் எப்படிச் சோர்வில்லாமல் இவ்வளவு தூரம் ஓடமுடிகிறது என்று கேட்கப்பட்டபோது அவர் அளித்த பதில் இது. "முதல் 32 கி.மீ வரை பிரச்னையில்லை! அடுத்த 10 கி.மீ.-க்கு நான் கடவுளிடம் பேசிக்கொண்டிருப்பேன். வலிகள் ஓடிவிடும். ஓடும்போது என் மனம் உற்சாகமாக இருக்கும். ஓடி முடித்த பிறகுதான் அயர்ச்சியாக இருக்கும். யார் வேண்டுமானாலும் மாரத்தான் போட்டியில் கலந்துகொள்ளலாம் என்பதற்கு நானே உதாரணம். ஒருமுறை கூட முயற்சி செய்யாதவர்களால் மட்டுமே இதைக் கடினம் என்று சொல்லமுடியும்" என்று விளக்கமளித்திருக்கிறார்.
"ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டதால்தான் எல்லோரும் என்னிடம் அன்பாக இருக்கிறார்கள். இல்லாவிட்டால், இந்தக் கிழவனிடம் யார் பேசப்போகிறார்கள்? நான் ஆசிர்வதிக்கப்பட்டவன்" என்று பெருமிதப்பட்ட ஃபவுஜா சிங் இன்று நம்மிடம் இல்லை.
Turbaned Tornado | Fauja Singh | Marathon Legend | Marathon