
திருப்பதி லட்டு தயாரித்த நெய்யில் கலப்படம் செய்த புகாரின் பேரில், திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிறுவனம் உள்ளிட்ட 3 தனியார் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் சிறப்பு புலனாய்வுக் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர முதல்வராக இருந்தபோது திருப்பதியில் லட்டு உள்ளிட்ட பிரசாதங்கள் தயாரிக்க விலங்கு கொழுப்புகள் கலந்த கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்தாண்டில் குற்றம்சாட்டினார்.
இந்த விவகாரம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தி விளக்கமளித்தார் முன்னாள் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. இதையடுத்து உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.
சிபிஐ, ஆந்திர காவல்துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையில் இந்த விவகாரத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்தது.
குறிப்பாக, திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய் வழங்க ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி வைஷ்ணவி டெய்ரி ஒப்பந்தம் பெற்றதும், போலே பாபா டெய்ரி நிறுவனத்திடம் இருந்து நெய் வாங்கியதாக வைஷ்ணவி டெய்ரி நிறுவனத்தில் போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது.
இதன் அடிப்படையில், திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்தின் தலைவர் ராஜசேகர், தெலங்கானா வைஷ்ணவி டெய்ரி நிறுவனத்தின் தலைவர் அபூர்வா சாவ்தா, உத்தரகண்ட் போலே பாபா டெய்ரி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர்கள் விபின் ஜெயின், பொமில் ஜெயின் ஆகியோர் சிறப்புப் புலனாய்வுக் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.