சர்ச்சைக்குரிய முன்னாள் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கரை கைது செய்வதற்கு எதிராக முன்பு வழங்கப்பட்ட இடைக்கால நீதிமன்ற பாதுகாப்பை ஆகஸ்ட் 29 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது தில்லி உயர் நீதிமன்றம்.
உண்மையான தகவல்களை மறைத்து, சட்டப்படி தேர்வெழுத அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைகளையும் மீறி அகில இந்திய குடிமைப் பணித் தேர்வில் கலந்து கொண்டதற்காக, மஹாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பூஜா கேத்கரின் ஐஏஎஸ் தேர்ச்சியை கடந்த மாதம் ரத்து செய்தது யுபிஎஸ்சி.
இந்த மோசடி விவகாரத்தில் பூஜா கேத்கர் மீது வழக்குத் தொடரப் போவதாகவும் அறிவித்தது யுபிஎஸ்சி. இதை அடுத்து இந்த விவகாரத்தில் முன் ஜாமின் கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தார் பூஜா கேத்கர்.
தில்லி உயர் நீதிமன்றத்தில் நடந்த பூஜா கேத்கரின் முன் ஜாமின் மனு மீதான விசாரணையில், பூஜா கேத்கரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரினார் யுபிஎஸ்சி தரப்பு வழக்கறிஞர். ஜாமின் மனு மீதான விசாரணையை மேற்கொண்ட நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத், இந்த விவகாரத்தில் தில்லி காவல்துறை பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, அடுத்த விசாரணை வரை பூஜா கேத்கரை கைது செய்ய தடை விதித்தார்.
இன்று (ஆகஸ்ட் 21) மீண்டும் பூஜாவின் முன் ஜாமின் மனு மீதான விசாரணை தில்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. ஆனால் தில்லி காவல்துறையிடம் இருந்து பதில் மனுதாக்கல் செய்யப்படாததால், முன் ஜாமின் மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 29-ல் மீண்டும் நடைபெறும் என்று அறிவித்தார் நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத்.
மேலும், பூஜா கேத்கரை கைது செய்ய முன்பு விதிக்கப்பட்ட தடையை ஆகஸ்ட் 29 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார் நீதிபதி பிரசாத்.