அந்த தரப்பரிசோதனை நடந்தபோது சந்திரபாபு நாயுடுதான் முதல்வராக இருந்தார்: ஜெகன்

தரப் பரிசோதனை அறிக்கையை அரசு அதிகாரியோ, டிடிடி நிர்வாகியோ வெளியிடவில்லை. அது சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்தில் வெளியிடப்பட்டது
அந்த தரப்பரிசோதனை நடந்தபோது சந்திரபாபு நாயுடுதான் முதல்வராக இருந்தார்: ஜெகன்
2 min read

`தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்தில் வெளியிடப்பட்ட நெய் தரப் பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தரப் பரிசோதனை நடந்தபோது, சந்திரபாபு நாயுடுதான் முதல்வராக இருந்தார்’ என்று திருப்பதி லட்டு குறித்த சர்ச்சைக்குப் பதிலளித்துள்ளார் ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. செய்தியாளர்கள் சந்திப்பில் ஜெகன் பேசியவை பின்வருமாறு:

`எங்கள் (திருப்பதி) கோயில் குறித்துப் பரவிவரும் சர்ச்சை துரதிஷ்டவசமானது. சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் பிரச்சாரத்தின்போது சந்திரபாபு நாயுடு அளித்த எந்த வாக்குறுதியையும் கடந்த 100 நாட்களில் அவர் நிறைவேற்றவில்லை. பொதுமக்களின் கோபத்திலிருந்து தப்பிக்கவே இந்த விவகாரத்தைக் கிளப்பி, எங்கள் கோயிலுக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவர் நடந்துகொண்டார்.

திருமலா திருப்பதி தேவஸ்தானம் (டிடிடி) ஒரு புகழ்பெற்ற மரியாதைக்குரிய அமைப்பாகும். அண்டை மாநில முதல்வர்களாலும், மத்திய அமைச்சர்களாலும் பரிந்துரைக்கப்பட்ட பலரும் அதில் அங்கம் வகிக்கின்றனர். சாதாரணமாக நடக்கும் நிகழ்வு அரசியலாக்கப்பட்டுள்ளது. 6 மாதங்களுக்கு ஒரு முறை டிடிடி நிர்வாகம் டெண்டர்களுக்கான அறிவிப்பை வெளியிடும்.

லட்டு தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை வழங்க ஆன்லைன் வழியாக டெண்டருக்கு விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் தகுதியின் அடிப்படையில் தேர்தெடுக்கப்படும். டேங்கர் லாரிகளில் இந்த நிறுவனங்கள் நெய்யை அனுப்பும்போது ஒவ்வொரு லாரியிலும் அந்த நெய்யைப் பரிசோதனை செய்த என்.ஏ.பி.எல் தரச்சான்றிதழ் இருக்கவேண்டும்.

இதை தொடர்ந்து நெய் டேங்கர்கள் திருப்பதிக்கு வந்த பிறகு, டிடிடி நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு டேங்கரிலும் இருந்து மூன்று மாதிரிகள் எடுக்கப்பட்டு தரப் பரிசோதனைக்கு அனுப்பப்படும். இந்த மூன்று மாதிரிகளும் தரப் பரிசோதனையில் தேறினால் மட்டுமே அந்த நெய் திருப்பதி கோயிலுக்குள் கொண்டு செல்லப்பட்டு லட்டு போன்ற பிரசாதங்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும்.

இந்த மூன்று மாதிரிகளில், ஒன்று மட்டும் தரப் பரிசோதனையில் தேறவில்லை என்றாலும் கூட, சம்மந்தப்பட்ட நெய் டேங்கர் திருப்பதி கோயிலுக்குள் நுழைய முடியாது. இந்த நடைமுறை பல தசாப்தங்களாக பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நடைமுறை தற்போது வழக்கத்தில் இருந்தபோதும்கூட சந்திரபாபு நாயுடு பொய்களைப் பரப்பி வருகிறார். இது துரதிஷ்டவசமானது.

அவர் 2014 முதல் 2019 வரை முதல்வராக இருந்தபோது தரப் பரிசோதனையில் தேறவில்லை என்பதால் 14 - 15 முறை நெய் டேங்கர்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதே போல கடந்த 2019 முதல் 2024 வரை எங்கள் ஆட்சியின்போது 18 முறை நெய் டேங்கர்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

தரப் பரிசோதனையில் தேறவில்லை என்பதற்காக கடந்த ஜூலை 12-ல் ஒரு நெய் டேங்கர் நிராகரிக்கப்பட்டுள்ளது. அப்போது சந்திரபாபு நாயுடுதான் முதல்வராக இருந்தார். வேறு ஒரு நெய் டேங்கரிலிருந்து நெய் மாதிரிகள் ஜூலை 17-ல் தரப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு அதன் முடிவுகள் ஜூலை 23-ல் பெறப்பட்டன. அந்த நெய் மாதிரிகள் தரப் பரிசோதனையில் தேறவில்லை என்பதால் நெய் டேங்கர் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இது நடந்து முடிந்து 2 மாதங்கள் ஆகிறது. அந்த தரப் பரிசோதனை அறிக்கையை அரசு அதிகாரியோ, டிடிடி நிர்வாக அதிகாரியோ வெளியிடவில்லை. ஆனால் அது சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்தில் வைத்து வெளியிடப்படுகிறது. முதல்வராகப் பொறுப்பேற்று நூறு நாட்களின் முடிவில் மக்களின் கோபத்தை திசைதிருப்ப இந்த தரப் பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in