மேடை போட்டுத் திட்டும் அளவு வளர்ந்துவிட்டேன்: அண்ணாமலை | Annamalai |

ஒட்டுமொத்த தமிழர்களையும் அவமானப்படுத்தும் கட்சியுடன் திமுக கூட்டணியில் உள்ளது ஆச்சர்யமாக இருக்கிறது...
பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை
பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை
2 min read

மும்பையில் மேடை போட்டு திட்டும் அளவு வளர்ந்துவிட்டேனா என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

மகாராஷ்டிரத்தில் வரும் 15 அன்று உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் மும்பை மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து, தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடந்த ஜனவரி 10 அன்று பிரசாரம் செய்தார். அப்போது பேசுகையில், மும்பை மகாராஷ்ட்ராவின் நகரமல்ல, சர்வதேச நகரம்” என்று குறிப்பிட்டார். இக்கருத்துக்கு மகாராஷ்டிராவின் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

ராஜ் தாக்கரே சாடல்

குறிப்பாக சமீபத்தில் உத்தவ் தாக்கரேவுடன் இணைந்துள்ள அவரது சகோதரரும் மஹாராஷ்டிர நவ்நிர்மான் சேனா கட்சியின் தலைவருமான ராஜ் தாக்கரே அண்ணாமலையைக் கடுமையாக சாடினார். நேற்று (ஜன. 11) நடந்த பிரசாரக் கூட்டத்தில் ராஜ் தாக்கரே பேசும்போது, “தமிழ்நாட்டிலிருந்து வந்த ரசமலாய் மும்பையைப் பற்றி பேசுகிறது. இதனால்தான் உங்களை எல்லாம் பால் தக்கரே விரட்டியடித்தார்” என்று கூறினார்.

சஞ்சய் ராவத் விமர்சனம்

மேலும் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சியைச் சேர்ந்த சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மகாராஷ்டிரத்தில் இருந்து மும்பையைப் பிரிக்க நினைக்கும் பாஜகவின் சதி அண்ணாமலையின் பேச்சில் எதிரொலிக்கிறது. அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து, அவரைக் கைது செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், உத்தவ் தாக்கரே சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழில் அண்ணாமலை மீது கறுப்பு மை பூசுவோம் என்றும், தன் கருத்துக்கு அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஏகிகரன் சமிதி என்ற அமைப்பு எச்சரிக்கை விடுத்ததாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

அண்ணாமலை விளக்கம்

இது தொடர்பாக இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை கூறியதாவது:-

“மும்பையில் வேறு வேலை இல்லாத தாக்கரேக்கள் என்னை அங்கிருந்துகொண்டு மிரட்டுகிறார்கள். அதற்காக நான் பெருமைப்படுகிறேன். ஒரு விவசாயியின் மகன், இன்று தாக்கரேவின் கோபத்தைச் சம்பாதித்திருக்கிறேன். மேடை போட்டு, கூட்டத்தைக் கூட்டி ராஜ் தாக்கரே, உத்தவ் தாக்கரே, ஆதித்ய தாக்கரே ஆகியோர் என்னைத் திட்டுகிறார்கள் என்றால் அந்த அளவுக்கு நான் வளர்ந்திருக்கிறேனா என்றுதான் தோன்றுகிறது.

காலை வெட்டுவோம் என்று மிரட்டல்

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி, தமிழ்நாட்டில் முரசொலியைப் போல் ஒரு பத்திரிகை வைத்திருக்கிறார்கள். அதில் நான் மும்பைக்குள் வந்தால் என் கால்களை வெட்டுவோம் என்றும், என் மீது சாயம் பூசுவோம் என்றும் எழுதியிருக்கிறார்கள். ஆனால், நான் மும்பைக்குச் செல்வேன். முடிந்தால் என் கால்களை வெட்டிப் பாருங்கள். இரண்டில் ஒன்று பார்த்துவிடலாம். இப்படிப்பட்ட மிரட்டல்களுக்குப் பயப்படுபவனாக இருந்திருந்தால் என் ஊருக்குள் மட்டும்தான் நான் உட்கார்ந்து கொண்டிருக்க முடியும்.

தமிழர்களை அவமானப்படுத்துகிறார்கள்

மூன்று தாக்கரேக்களும் கூட்டம் போட்டு என்னை அவமானப்படுத்துகிறார்கள். அது ஒன்றும் புதியதல்ல. தமிழ்நாட்டில் திமுக காலங்காலமாக அதைத்தான் செய்து கொண்டிருக்கிறது. ஆனால், அவர்கள் ஒட்டுமொத்த தமிழர்களையும் அவமானப்படுத்துகிறார்கள். அப்படிப்பட்ட கூட்டணியில் திமுக இருக்கிறது என்பது ஆச்சர்யமாக உள்ளது.

மிரட்டல் விடுத்துப் பிழைக்கிறார்கள்

நான் காமராஜர் இந்தியாவின் நல்ல தலைவர் என்று சொன்னால் அதற்கென்று அவர் தமிழர் அல்ல என்று ஆகிவிடுமா? மோடியை தேசத்தின் தலைவர் என்று குறிப்பிட்டால் அவர் குஜராத்தைச் சேர்ந்தவர் அல்ல என்று ஆகிவிடுமா? அப்படித்தான் மும்பை சர்வதேச தரத்திலான நகரம் என்று நான் குறிப்பிட்டதை மகாராஷ்டிரத்தின் நகரம் இல்லை என்று நான் சொன்னதாக திரித்துப் பேசுகிறார்கள். அவர்கள் ஏதும் அறியாதவர்கள். தமிழ்நாட்டில் திமுகவும், மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவும் மிரட்டல் விடுத்துத்தான் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள்” என்றார்.

Summary

Annamalai questioned whether he had grown up enough to be scolded on stage in Mumbai.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in