கடந்த ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சியில், திருப்பதி கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டதாக சில வாரங்களுக்கு முன்பு தற்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார்.
இதை தொடர்ந்து, திருப்பதி கோயில் பிரசாதத்தில் அசுத்தத்தைப் புகுத்த மேற்கொள்ளப்பட்ட தீய முயற்சிகளால் ஏற்பட்ட தவறுக்கு பிராயசித்தமாக 11 நாட்கள் விரதமிருந்து, நேரடியாக திருப்பதி பாலாஜியை தரிசித்து பாவமன்னிப்பு கோரவிருப்பதாக கடந்த செப்.22-ல் அறிவித்தார் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்.
இன்றுடன் (அக்.2) 11 நாள் விரதம் முடிவடையும் நிலையில், மலை மீது உள்ள பாலாஜியை தரிசிக்க அடிவாரத்தில் இருந்து நடந்து சென்றார் துணை முதல்வர் பவன் கல்யாண். அவரது மகள் போலேனா அஞ்சனாவும் அவருடன் திருப்பதி கோயிலுக்குச் சென்றுள்ளார்.
இதை அடுத்து சாமி தரிசனம் மேற்கொள்ளும் முன்பு, திருப்பதி பாலாஜி மீதான நம்பிக்கையையும், பக்தியையும் வெளிப்படுத்தும் நோக்கில் ஹிந்து அல்லாதோர் கையெழுத்திடும் படிவத்தில் பவன் கல்யாண் மகள் போலேனா அஞ்சனா கையெழுத்திட்டார்.
பவன் கல்யாணுக்கும், கிறிஸ்துவரான ரஷ்யாவைச் சேர்ந்த அவரது மனைவி அன்னா லெஷ்னேவாவுக்கும் பிறந்த போலேனா அஞ்சனா, கிருஸ்துவ மதத்தைப் பின்பற்றி வருகிறார். அஞ்சனாவுக்கு 18 வயது பூர்த்தியாகவில்லை என்பதால் படிவத்தில் பவன் கல்யாணும் கையெழுத்திட்டார்.
இதைத் தொடர்ந்து சாமி தரிசனம் மேற்கொண்டு, சிறப்புப் பூஜைகளில் கலந்துகொண்டு தன் 11 நாள் விரத பரிகாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார் பவன் கல்யாண்.
லட்டு விவகாரத்துடன் கடந்த ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான 5 வருட ஆட்சியில் நடைபெற்ற அனைத்து முறைகேடுகள் குறித்தும் முறையாக விசாரிக்கப்படும் என நேற்று (அக்.1) அறிவித்தார் பவன் கல்யாண்.