
திருப்பதியில் இலவச தரிசன டோக்கன்களை வாங்கக் குவிந்த பொதுமக்கள் கூட்டத்தால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் ஜனவரி 10-ம் தேதி வைகுண்ட ஏகாதசி தொடங்குகிறது. இதை ஒட்டி வரும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு நடைபெறுகிறது.
சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வைக் காண பொதுமக்களுக்கு இலவச டோக்கன்கள் விநியோகம் செய்யும் வகையில், திருப்பதி ரயில் நிலையத்திற்கு எதிரே உள்ள விஷ்ணு நிவாசம் காம்பிளக்ஸ் அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த இலவச டோக்கன்களைப் பெற ஒரே நேரத்தில் அங்கே 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்த நிலையில் கடும் கூட்ட நெரிசலில் ஏற்பட்டது.
இதன் காரணமாக அங்கிருந்த 10-க்கும் மேற்பட்டோருக்கு மூச்சு திணறல் பாதிப்பு ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக சேலம் மேச்சேரியைச் சேர்ந்த மல்லிகா என்கிற பெண் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்தனர். மூச்சித்திணறரலால் பாதிக்கப்பட்டவர்கள் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து, சம்பவம் நடைபெற்ற இடத்தில் திருப்பதி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஸ்வர், எஸ்.பி. சுப்பராயலு, திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் சியமளா ராவ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இந்த நிகழ்வு குறித்து உயரதிகாரிகளிடம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கேட்டறிந்ததாகவும், நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளதாக ஆந்திர முதல்வர் அலுவலகம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.