நேபாளத்தின் டானாஹுன் மாவட்டத்தில் நேற்று (ஆகஸ்ட் 24) நடந்த பேருந்து விபத்தில் 41 பயணிகள் உயிரிழந்ததாக செய்தியாளர்கள் சந்திப்பில் தகவல் தெரிவித்துள்ளார் மஹாராஷ்டிர மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் கிரீஷ் மஹாஜன்.
நேற்று காலை நேபாளத்தின் பொக்காரா நகரத்திலிருந்து கிளம்பிய இந்திய பயணியர் பேருந்து, அந்நாட்டுத் தலைநகர் காத்மாண்டு நோக்கிச் சென்று கொண்டிருந்தது. காத்மாண்டுவுக்கு 110 கி.மீ.க்கு முன்பு டானாஹுன் மாவட்டத்தில் உள்ள அம்புகேரணி என்ற இடத்தில், 150 அடி பள்ளத்தாக்கில் விழுந்து பேருந்து விபத்துக்குள்ளானது.
இந்தப் பேருந்தில் பயணித்த இந்தியர்களில் பெரும்பாலானோர் மஹாராஷ்டிர மாநிலம் ஜல்காவுன் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மஹாராஷ்டிர அமைச்சர் கிரீஷ் மஹாஜன், `41 பயணிகள் விபத்தில் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக தில்லியில் உள்ள நேபாள தூதரகத்திடம் தொடர்ந்து பேசிவருகிறோம். 12 பயணிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்’ என்றார்.
மஹாராஷ்டிர மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் இயக்குநர் லாஹூ மாலி, `விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களும், காயமடைந்தவர்களும் இந்தியா-நேபாள சர்வதேச எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து கோரக்பூர் விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். பிறகு அங்கிருந்து நாசிக் விமான நிலையத்துக்கு அவர்களைக் கூட்டி வர முடிவுசெய்யப்பட்டுள்ளது’ என்றார்.
நேபாள விபத்தில் சேதமடைந்த பேருந்தின் நம்பர் பிளேட்டின் மூலம் அது உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த பேருந்து என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆனால் பேருந்து குறித்த முழு விவரங்கள் இன்னமும் வெளிவரவில்லை.