

மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் நவி மும்பையில் ஞாயிற்றுக்கிழமை மோதின. இதில் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்முறையாக உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது.
உலகக் கோப்பை 2025-ல் இந்தியா கோப்பையை வென்றது உள்பட பல்வேறு சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன.
உலகக் கோப்பையை வென்ற நான்காவது அணி
ஆஸ்திரேலியா - 7 முறை
இங்கிலாந்து - 4 முறை
நியூசிலாந்து - 1 முறை
இந்தியா - 1 முறை (நேற்று)
தீப்தி சர்மாவின் 5 விக்கெட்டுகளும் அரை சதமும்
இறுதிச் சுற்றில் தீப்தி சர்மா பேட்டிங்கில் அரை சதம் அடித்து, பந்துவீச்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்மூலம், உலகக் கோப்பை நாக் அவுட் சுற்றில் ஓர் ஆட்டத்தில் அரை சதம் அடித்து, 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் கிரிக்கெட்டர் (ஆடவர் கிரிக்கெட் உள்பட) என்ற சாதனையை தீப்தி சர்மா படைத்துள்ளார்.
மகளிர் உலகக் கோப்பையில் ஓர் ஆட்டத்தில் அரை சதம் அடித்து, 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.
உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீராங்கனை என்ற சாதனையை தீப்தி சர்மா படைத்துள்ளார். முன்னதாக, 2017 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் இந்தியாவுக்கு எதிராக அன்யா ஷ்ரப்ஷோல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஒரு மகளிர் உலகக் கோப்பைப் போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீராங்கனைகள் பட்டியலில் 22 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தைப் பகிர்ந்துள்ளார் தீப்தி சர்மா. முன்னதாக, லின் ஃபுல்ஸ்டன் 1982 உலகக் கோப்பையில் 23 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதே உலகக் கோப்பையில் ஜாக்கி லார்ட் 22 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஓர் உலகக் கோப்பையில் 200 ரன்கள் எடுத்து 20-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீராங்கனை என்ற சாதனையையும் தீப்தி சர்மா படைத்துள்ளார்.
அரையிறுதி வரை விளையாடாதவர் படைத்த சாதனை
ஒருநாள் உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் சிறந்த வீராங்கனைக்கான விருதை வென்ற இளம் வீராங்கனை என்ற பெருமையை 21 வயது 278 நாள்களான ஷெஃபாலி வர்மா பெற்றுள்ளார். 2013 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் ஆஸ்திரேலியாவின் ஜெஸ் டஃபின் 23 வயது 235 நாள்களில் சிறந்த வீராங்கனைக்கான விருதை வென்றதே சாதனையாக இருந்தது.
லாரா வோல்வார்டின் மறக்க முடியாத உலகக் கோப்பை
ஓர் உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த வீராங்கனை என்ற சாதனையை தென்னாப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட் படைத்துள்ளார்.
2022 உலகக் கோப்பையில் அலீஸா ஹீலி 509 ரன்கள் குவித்தது சாதனையாக இருந்தது. 2025 உலகக் கோப்பையில் லாரா வோல்வார்ட் 571 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார். இருவருமே அரையிறுதி மற்றும் இறுதிச் சுற்றுகளில் அடுத்தடுத்து சதமடித்தார்கள்.
மகளிர் உலகக் கோப்பையில் அதிகமுறை 50-க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்தவர்கள் வரிசையில் லாரா வோல்வார்ட் முதலிடத்தைப் பிடித்துள்ளார். உலகக் கோப்பைகளில் இவர் இதுவரை மொத்தம் 14 முறை 50 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார்.
அடித்தளம் போட்ட தொடக்கக் கூட்டணி
மகளிர் உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் முதல் விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்த இரண்டாவது இணை என்ற பெருமையை ஸ்மிருதி மந்தனா - ஷெஃபாலி வர்மா இணை (104 ரன்கள்) பெற்றுள்ளது. முன்னதாக, அலீஸா ஹீலி மற்றும் ரேக்கல் ஹெயின்ஸ் இணை 2022-ல் முதல் விக்கெட்டுக்கு 160 ரன்கள் சேர்த்தது. அரையிறுதிக்கு முன்பு வரை தொடக்க பேட்டராக ஸ்மிருதி மந்தனாவுடன் களமிறங்கி சாதித்து வந்தவர் பிரதீகா ராவல். இவருக்குக் காயம் ஏற்படவே ஷெஃபாலி வர்மா சேர்க்கப்பட்டார்.
The Women's World Cup witnessed a flurry of record-breaking performances, with teams and players rewriting history across scoring charts, viewership milestones, and on-field achievements.
IND v SA | Women's World Cup | Deepti Sharma | Shafali Verma | Smriti Mandhana | Laura Wolvaardt |