
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 14 வயது வைபவ் சூர்யவன்ஷி, ஜெய்ப்பூரில் நடைபெற்ற குஜராத் டைடன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 35 பந்துகளில் சதமடித்து பல புதிய சாதனைகளைப் படைத்துள்ளார்.
38 பந்துகளில் 11 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 101 ரன்களுக்கு சூர்யவன்ஷி ஆட்டமிழந்தார். இதனால் 210 ரன்கள் இலக்கை 15.5 ஓவர்களில் அடைந்து சாதனை படைத்தது ராஜஸ்தான் அணி.
ஆடவர் டி20 கிரிக்கெட்டில் சதமடித்த இளம் வீரர் - சூர்யவன்ஷி. 14 வயது, 32 நாள்களில் இச்சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன்பு, 2013-ல் மஹாராஷ்டிரத்தின் விஜய் ஸோல், மும்பைக்கு எதிராக 18 வயது, 118 நாள்களில் சதமடித்ததே சாதனையாக இருந்தது.
35 பந்துகளில் சதமடித்த சூர்யவன்ஷி, ஐபிஎல் போட்டியில் விரைவாக சதமடித்த 2-வது வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார். கெயில் 2013-ல் புனே வாரியஸுக்கு எதிராக 30 பந்துகளில் சதமடித்தது தான் இன்றும் சாதனையாக உள்ளது.
ஐபிஎல் போட்டியில் வேகமாக சதமடித்த இந்தியர் - சூர்யவன்ஷி. இதற்கு முன்பு 2010-ல் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக ராஜஸ்தானின் யூசுப் பதான் 37 பந்துகளில் சதமடித்ததே சாதனையாக இருந்தது. யூசுப் பதான் அப்போது சதமடித்தபோது சூர்யவன்ஷி பிறந்திருக்கவே இல்லை.
தான் அடித்த 101 ரன்களில் 93.06% ரன்களை பவுண்டரிகள் மூலமாக (ஃபோர்கள், சிக்ஸர்கள்) எடுத்துள்ளார் சூர்யவன்ஷி. ஆடவர் டி20யில் இது ஒரு சாதனை. இதற்கு முன்பு 2024-ல் மேஹாலயாவுக்கு எதிராக அபிஷேக் சர்மா 92.45% ரன்களை பவுண்டரிகள் மூலமாக எடுத்திருந்ததே சாதனையாக இருந்தது.
இளம் வயதில் 50+ ரன்களை எடுத்த வீரரும் சூர்யவன்ஷி தான். இதற்கு முன்பு முஹமது நபியின் மகன் ஹசன் எயிசாகில் 15 வயது 360 நாள்களில் அரை சதமெடுத்ததே சாதனையாக இருந்தது.
11 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் ஐபிஎல் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த சாதனையைச் சமன் செய்துள்ளார் சூர்யவன்ஷி. இதற்கு 2010-ல், சிஎஸ்கேவின் முரளி விஜய் 127 ரன்கள் எடுத்தபோது 11 சிக்ஸர்கள் அடித்திருந்தார்.
11 சிக்ஸர்கள் அடித்து, ராஜஸ்தான் அணியில் அதிக சிக்ஸர்கள் (10) அடித்த சஞ்சு சாம்சனின் சாதனையையும் சூர்யவன்ஷி முறியடித்துள்ளார்.
தனது 3-வது இன்னிங்ஸிலேயே சதமடித்து ஐபிஎல்-லில் குறைந்த இன்னிங்ஸில் முதல் சதத்தை அடித்த வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார் சூர்யவன்ஷி. இதற்கு முன்பு 4 இன்னிங்ஸில் மனிஷ் பாண்டே (2009), பால் வல்தாட்டி (2011), பிரியன்ஸ் ஆர்யா (2025) ஆகியோர் சதமடித்துள்ளார்கள்.
ஐபிஎல் போட்டியில் அறிமுகமான கரிம் ஜனத்தின் முதல் ஓவரில் 30 ரன்கள் எடுத்தார் சூர்யவன்ஷி. இதன்மூலம் ஐபிஎல் போட்டியில் முதல் ஓவரில் அதிக ரன்கள் (25) கொடுத்து மோசமான சாதனை படைத்த வருண் சக்ரவர்த்தியைப் பின்னுக்குத் தள்ளியுள்ளார் கரிம் ஜனத்.
210 ரன்கள் இலக்கை 15.5 ஓவர்களில் அடைந்தது ராஜஸ்தான். ஆடவர் டி20யில் இது ஒரு சாதனை. 200-க்கு மேற்பட்ட ரன்களை 16 ஓவர்களில் பாகிஸ்தான், ஆர்சிபி, சர்ரே ஆகிய அணிகள் அடைந்ததே இதற்கு முன்பு சாதனையாக இருந்தன.
2022-ல் ராஜஸ்தான் அணிக்காக முதல் விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்த (தில்லிக்கு எதிராக) பட்லர் - படிக்கல் ஆகியோரின் சாதனையைப் பின்னுக்குத் தள்ளி சூர்யவன்ஷியும் ஜெயிஸ்வாலும் 166 ரன்கள் எடுத்துள்ளார்கள்.
சூர்யவன்ஷியும் ஜெயிஸ்வாலும் இணைந்து பவர்பிளேயில் ராஜஸ்தானுக்கு 87 ரன்கள் அளித்தார்கள். ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி பவர்பிளேயில் எடுத்த அதிகபட்ச ரன்கள் இவை. இதற்கு முன்பு 2023-ல் சன்ரைசர்ஸுக்கு எதிராக பவர்பிளேயில் 85 ரன்கள் எடுத்திருந்ததே சாதனையாக இருந்தது.
210+ ரன்கள் இலக்கை 4 முறை விரட்டி சாதனை படைத்துள்ளது ராஜஸ்தான் அணி. இதேபோல மிடில்செக்ஸ் அணியும் 4 முறை 210+ ரன்கள் இலக்கை வெற்றிகரமாக விரட்டியுள்ளது. ஐபிஎல்லில் மும்பை, லக்னெள, சன்ரைசர்ஸ் அணிகள் 3 முறை இந்த இலக்கை அடைந்துள்ளன.
குஜராத் அணிக்கு எதிராக அதிக ரன்கள் கொண்ட இலக்கை விரட்டி சாதனை படைத்துள்ளது ராஜஸ்தான். இதற்கு முன்பு கேகேஆர் அணி குஜராத்துக்கு எதிராக 205 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக விரட்டி சாதனை படைத்திருந்தது.