
ரஞ்சி கோப்பையில் சண்டிகரை 209 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தமிழ்நாடு வெற்றி பெற்றுள்ளது.
ரஞ்சி கோப்பையில் டி பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு, சண்டிகரை சேலத்தில் எதிர்கொண்டது. டாஸ் வென்ற சண்டிகர் கேப்டன் மனன் வோரா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 301 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. ஆண்ட்ரே சித்தார்த் அதிகபட்சமாக 106 ரன்கள் எடுத்தார். சண்டிகரில் விஷு காஷ்யப் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சண்டிகரில் தொடக்க பேட்டர் ஷிவம் பாம்ப்ரி சதமடித்து 108 ரன்கள் எடுத்தார். மற்ற பேட்டர்கள் ஒத்துழைப்பு கொடுக்காததால், 204 ரன்களுக்கு சுருண்டது சண்டிகர். தமிழ்நாடு அணியில் அதிகபட்சமாக அஜித் ராம் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
97 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய தமிழ்நாடு அணி 46 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. நாராயண் ஜெகதீசன், விஜய் ஷங்கர் கூட்டணி அமைத்து அணியை மீட்டெடுத்தார்கள். ஜெகதீசன் 89 ரன்கள் எடுத்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விஜய் ஷங்கர் 150 ரன்கள் விளாசினார்.
தமிழ்நாடு அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 305 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. இதன்மூலம், சண்டிகரின் வெற்றிக்கு 403 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தமிழ்நாடு அணியின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் சண்டிகர் அணி தடுமாறியது. மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்திருந்தது.
நான்காவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. கேப்டன் மனன் வோரா மட்டும் சதமடித்து 100 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 193 ரன்களுக்கு அந்த அணி சுருண்டது. இதன்மூலம், தமிழ்நாடு அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தமிழ்நாடு அணியில் அஜித் ராம் மற்றும் கேப்டன் சாய் கிஷோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். பேட்டிங்கில் ஆட்டமிழக்காமல் 150 ரன்கள் விளாசிய விஜய் ஷங்கர் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
இந்த வெற்றியின் மூலம் தமிழ்நாடு அணி டி பிரிவு புள்ளிகள் பட்டியலில் 25 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இதுவரை விளையாடிய 6 ஆட்டங்களில் 3 வெற்றிகளைப் பெற்றுள்ளது. 3 ஆட்டங்களை டிரா செய்துள்ளது தமிழ்நாடு அணி.
தமிழ்நாடு அணி தனது அடுத்த ஆட்டத்தில் ஜார்க்கண்டை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் ஜனவரி 30 அன்று தொடங்குகிறது.