குவஹாத்தி டெஸ்டில் கில் இல்லை: காப்பாற்றுவாரா ரிஷப் பந்த்? | Shubman Gill | Rishabh Pant | IND v SA |

குவஹாத்தி டெஸ்டிலும் தோற்றால், சொந்த மண்ணில் ஓராண்டு இடைவேளையில் இரண்டாவது டெஸ்ட் தொடரை இழக்க நேரிடும்.
Shubman Gill ruled out of Guwahati Test: Rishabh Pant to lead Team India against South Africa
ரிஷப் பந்த் (கோப்புப்படம்)ANI
2 min read

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டிலிருந்து இந்திய கேப்டன் ஷுப்மன் கில் காயம் காரணமாக விலகியுள்ளார்.

இந்தியாவுக்குப் பயணம் செய்துள்ள தென்னாப்பிரிக்க அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் குவஹாத்தியில் நவம்பர் 22 அன்று தொடங்குகிறது.

முதல் டெஸ்ட் முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கின்போது இந்திய கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டது. உடனடியாகக் களத்திலிருந்து வெளியேறிய அவர், மருத்துவமனைக்குச் சென்றார். அந்த டெஸ்டில் மேற்கொண்டு அவர் பேட்டிங், ஃபீல்டிங் என எதிலும் பங்கெடுக்கவில்லை.

இரண்டாவது டெஸ்ட் குவஹாத்தியில் நடைபெறவுள்ள நிலையில், இதிலும் இவர் பங்கேற்பது சந்தேகம் என்றே கூறப்பட்டு வந்தது. இரண்டாவது டெஸ்டுக்காக புதன்கிழமை குவஹாத்தி சென்றாலும், பயிற்சியில் அவர் பங்கெடுக்கவில்லை. இந்நிலையில், இரண்டாவது டெஸ்டிலிருந்தும் அவர் விலகியுள்ளார்.

டெஸ்டுக்கு முந்தைய நாள் இரு அணிகள் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறும். இந்திய கேப்டன் ஷுப்மன் கில்லுக்குப் பதிலாக துணை கேப்டன் ரிஷப் பந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். குவஹாத்தி டெஸ்டிலிருந்து கில் விலகியதை, பந்த் உறுதி செய்தார்.

கில் இல்லாத காரணத்தால், குவஹாத்தி டெஸ்டில் பந்த் தான் இந்திய அணியை வழிநடத்தப்போகிறார். இந்திய அணியின் 38-வது டெஸ்ட் கேப்டன் எனும் பெருமையை ரிஷப் பந்த் பெறப்போகிறார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் ரிஷப் பந்த் கூறியதாவது:

"அணி விவரத்தை நாளை (சனிக்கிழமை) அறிவிக்கிறோம். நாங்கள் ஏற்கெனவே முடிவு செய்துவிட்டோம், விளையாடப் போகும் வீரரிடமும் பேசிவிட்டோம்.

ஷுப்மன் கில் தேறி வருகிறார். குவஹாத்தி டெஸ்டில் விளையாட அவருடைய உடல் ஒத்துழைக்காதபோதிலும், அவர் மிகவும் ஆர்வமாக இருந்தார். இந்த டெஸ்டுக்கு நான் தான் கேப்டன் என்பது நேற்று தான் எனக்குத் தெரிய வந்தது" என்றார் ரிஷப் பந்த்.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 0-3 என்ற கணக்கில் கடந்தாண்டு இழந்தது. 12 ஆண்டுகளில் சொந்த மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்தது இதுவே முதல்முறை. தென்னாப்பிரிக்காவுடனான முதல் டெஸ்டில் தோல்வியடைந்துள்ள நிலையில், இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு உள்ளது. இல்லையெனில், ஏறத்தாழ ஓராண்டு இடைவேளையில் சொந்த மண்ணில் இரண்டாவது டெஸ்ட் தொடரை இழக்கும் மிக மோசமான நிலையை இந்திய அணி எதிர்கொள்ள நேரிடும். முதல்முறையாக டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்கும் பந்த், இந்திய அணியைக் காப்பாற்றுவாரா?

Summary

Shubman Gill has been ruled out of the Guwahati Test, paving the way for Rishabh Pant to take charge as India’s captain against South Africa.

Shubman Gill | IND v SA Test Series | IND v SA | Guwahati Test | Rishabh Pant | Gill injury | Team India | Temba Bavuma |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in