

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் முஹமது ஷமி இந்திய அணிக்காகக் கடைசியாக சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் விளையாடினார்.
இதன்பிறகு, இந்திய அணி இங்கிலாந்துக்குப் பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடியது. ஆசியக் கோப்பை டி20யில் விளையாடியது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்து ஒருநாள் தொடரில் விளையாடியது. அடுத்ததாக டி20 தொடர்களில் விளையாடுகிறது. இவை எதிலும் ஷமி இடம்பெறவில்லை.
முஹமது ஷமிக்கு முழங்காலில் பிரச்னை இருந்தது. இதன் காரணமாக 2024-ல் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டார். காயத்திலிருந்து முழுமையாகக் குணமடைய வழக்கத்தைவிட கூடும் நேரம் எடுத்துக்கொள்ள நேரிட்டது. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி முழு உடற்தகுதியை நிரூபித்த பிறகே, சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணியில் அவர் இடம்பிடித்தார். காயத்திலிருந்து குணமடைந்த பிறகு, இந்தியாவுக்காக மொத்தம் 9 ஆட்டங்களில் மட்டுமே அவர் விளையாடியுள்ளார்.
முஹமது ஷமி இந்திய அணியில் இடம்பெறாதது பற்றி தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் கூறும்போது, அவருடைய உடற்தகுதியைக் காரணமாகக் கூறினார். இதற்கு ஷமியும் எதிர்வினையாற்றினார். ரஞ்சி கோப்பைப் போட்டியில் உத்தரகண்டுக்கு எதிரான ஆட்டத்தின்போது, "உடற்தகுதியில் பிரச்னை இருந்தால், பெங்காலுக்காக விளையாட இங்கு நான் வந்திருக்கவே மாட்டேன். இதுபற்றி பேசி சர்ச்சையை உருவாக்க விரும்பவில்லை. என்னால் நான்கு நாள் ஆட்டங்களில் (ரஞ்சி கோப்பை) விளையாட முடியும்போது, ஒருநாள் கிரிக்கெட்டிலும் விளையாட முடியும்" என்று ஷமி கூறியிருந்தார்.
இந்தச் சூழல்களுக்கு மத்தியில் தான் ரஞ்சி கோப்பைப் போட்டியில் ஷமி தனது பாய்ச்சலை வெளிப்படுத்தி வருகிறார். பெங்காலுக்காக விளையாடி வரும் முஹமது ஷமி உத்தரகண்டுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் மொத்தம் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
குஜராத், பெங்கால் இடையிலான அடுத்த ஆட்டம் அக்டோபர் 25 அன்று தொடங்கியது. இதில் குஜராத்துக்கு எதிராக பெங்கால் அணி முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
பெங்காலின் வெற்றிக்கு முஹமது ஷமி மிக முக்கியப் பங்காற்றியுள்ளார். முதல் இன்னிங்ஸில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2021-க்குப் பிறகு முதல் தர கிரிக்கெட்டில் அவர் எடுக்கும் முதல் 5 விக்கெட்டுகள் இது.
இதுவரை விளையாடியுள்ள இரு ரஞ்சி ஆட்டங்களிலும் அவர் 10.46 சராசரியில் மொத்தம் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி தேர்வுக் குழுவின் கதவைக் காட்டமாகத் தட்டியிருக்கிறார் ஷமி.
இந்திய அணி அடுத்ததாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடரில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கான போட்டியில் முஹமது ஷமி முன்னணியில் உள்ளார்.
குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் 28.3 ஓவர்களும் உத்தரகண்டுக்கு எதிரான ஆட்டத்தில் சுமார் 40 ஓவர்களும் வீசியுள்ள அவர் உடற்தகுதியின் அடிப்படையிலும் தான் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
Shami Knocks on Selectors’ Door with 15 Wickets in Two Ranji Games, Including a Five-Wicket Haul Against Gujarat
Mohammed Shami | Ranji Trophy | Bengal | Gujarat | Ajit Agarkar |