வங்கதேசத்தில் வன்முறை தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஷகிப் அல் ஹசன் பெயர் இடம்பெற்றுள்ளது.
வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வன்முறையானது. அந்த நாட்டுப் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டைவிட்டு வெளியேறினார்.
இந்த வன்முறை தொடர்பாக 147 பேர் மீது கொலைக்குத் தொடர்பு இருப்பதாக வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதில் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசனும் ஒருவர். தாகாவின் அடபோர் காவல் நிலையத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. துணிக்கடை ஊழியர் ஒருவர் உயிரிழந்தது (ஆகஸ்ட் 5-ல்) தொடர்பாக, இவருடைய தந்தை அளித்த புகாரின் பேரில் இந்த வழக்கானது பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஷகிப் அல் ஹசன், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. ஈஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோவுக்கு கிடைத்த தகவலின்படி 27 அல்லது 28-வது குற்றவாளியாக ஷகிப் அல் ஹசன் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆனால், இந்த வன்முறைச் சம்பவங்கள் நடந்தபோது ஷகிப் அல் ஹசன் வங்கதேசத்தில் இல்லை. க்ளோபல் டி20 கனடா லீக் போட்டியில் விளையாடுவதற்காக கனடாவில் இருந்தார். ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 9 வரை இவர் கனடாவில் இருந்தார். இதற்கு முன்பு மேஜர் லீக் கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக அமெரிக்காவில் இருந்தார். தற்போது பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் டெஸ்டில் விளையாடி வருகிறார்.
ஷேக் ஹசீனா நாட்டைவிட்டு வெளியேறியதைத் தொடர்ந்து, அங்கு முஹமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்துள்ளது.