
தெ.ஆ. அணிக்கு எதிரான முதல் டெஸ்டே தனது கடைசி டெஸ்டாக இருக்கும் என்று ஷகிப் அல் ஹசன் தெரிவித்த நிலையில், அந்த டெஸ்டில் இருந்து விலகியுள்ளார்.
வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு பலரும் உயிரிழந்தனர்.
இதைத் தொடர்ந்து அந்த நாட்டுப் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டைவிட்டு வெளியேறினார்.
முன்னதாக, ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சியில் ஷகிப் அல் ஹசன் எம்.பி.யாக இருந்தார்.
இதன் தொடர்ச்சியாக ஷகிப் அல் ஹசன் வங்கதேசத்துக்கு திரும்பக்கூடாது என அவருக்கு எதிராக எதிர்ப்புகள் கிளம்பியது. இதனிடையே, ஒரு கொலை வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் ஷகிப் அல ஹசனின் பெயரும் சேர்க்கப்பட்டு இருந்தது.
இதைத் தொடர்ந்து தெ.ஆ. அணிக்கு எதிரான முதல் டெஸ்டே தனது கடைசி டெஸ்டாக இருக்கும் என்று ஷகிப் அல் ஹசன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் பேசியதாவது:
வாய்ப்பு கிடைத்தால், நான் விளையாடக் கூடிய சூழல் உருவானால், மிர்பூரில் நடைபெறும் டெஸ்ட் தான் என்னுடையக் கடைசி டெஸ்டாக இருக்கும். நான் பாதுகாப்பு உணர்வுடன் விளையாடுவதற்கான சூழலை உறுதி செய்ய வங்கதேச கிரிக்கெட் வாரியம் முயற்சித்து வருகிறது. அதே சமயம், நான் எந்தத் தடையுமின்றி நாட்டைவிட்டு வெளியேறவும் வேண்டும். நான் வங்கதேச குடிமகன் என்பதால், வங்கதேசம் செல்வதில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. என்னுடையப் பாதுகாப்பு குறித்து தான் என்னுடையக் கவலை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து சமீபத்தில், “நான் அடுத்து எங்கு செல்வேன் என்று தெரியவில்லை, ஆனால் நிச்சயமாக வங்கதேசத்துக்குச் செல்லமாட்டேன்” என்று ஷகிப் அல் ஹசன் கிரிக்கின்ஃபோவிடம் தெரிவித்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக தெ.ஆ. அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இருந்து ஷகிப் அல் ஹசன் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஹசன் முரத் அனியில் இடம்பெற்றுள்ளார்.
வங்கதேசத்துக்கு திரும்புவது குறித்து ஷகிப் அல் ஹசன் உறுதியாக எதுவும் சொல்லவில்லை என்பதால் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்கா - வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் அக்.21 அன்று மிர்பூரில் நடைபெறவுள்ளது.
தெ.ஆ. அணிக்கு எதிரான முதல் டெஸ்டே தனது கடைசி டெஸ்டாக இருக்கும் என்று ஷகிப் அல் ஹசன் தெரிவித்த நிலையில், தற்போது அதில் இருந்து விலகியுள்ளார்.
இந்நிலையில் அவரது டெஸ்ட் பயணம் முடிந்துவிட்டதா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.