
வங்கதேசத்தில் பெரும் போராட்டம் வெடித்ததைத் தொடர்ந்து, அந்நாட்டுப் பிரதமராக இருந்த அவாமி லீகின் ஷேக் ஹசீனா கடந்தாண்டு ஆகஸ்டில் நாட்டைவிட்டு வெளியேறினார். ஷகிப் அல் ஹசன் கடந்தாண்டு ஜனவரி முதல் கடந்தாண்டு ஆகஸ்ட் வரை அவாமி லீக் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். ஷேக் ஹசீனா நாட்டைவிட்டு வெளியேறியபோது, ஷகிப் அல் ஹசன் வங்கதேசத்தில் இல்லை. அதன்பிறகு அவர் வங்கதேசத்துக்குத் திரும்பவும் இல்லை. காரணம், ஷேக் ஹசீனா மீது அங்கு மக்கள் மத்தியில் பெரும் கோபம் உள்ளது. ஷகிப் அல் ஹசன் அவருடைய ஆதரவாளராக அறியப்பட்டு வருகிறார்.
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு ஷகிப் அல் ஹசன் சமூக ஊடகங்களில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இதற்கு எதிர்வினையாற்றும் வகையில் வங்கதேசத்தின் விளையாட்டு ஆலோசகர் ஆசிஃப் மஹ்மூத் ஒரு பதிவைப் பதிவிட்டிருந்தார்.
அதில் ஷகிப் அல் ஹசன் பெயரைக் குறிப்பிடாமல், "ஒரு நபரை மீண்டும் சேர்க்காததற்கு எல்லோரும் என்னை விமர்சித்தீர்கள். ஆனால், நான் செய்தது சரி. விவாதம் முடிந்துவிட்டது" என்று ஆசிஃப் மஹ்மூத் பதிவிட்டிருந்தார்.
இதற்கு மறைமுகமாகப் பதிலளிக்கும் விதமாக ஷகிப் அல் ஹசன் ஒரு பதிவைப் போட்டிருந்தார். "எனவே, அந்த நபரால் தான் என்னால் மீண்டும் வங்கதேச சீருடையை ஒருபோதும் அணிய முடியாது. அவரால் தான் என்னால் வங்கதேசத்துக்காக மீண்டும் விளையாட முடியாது என்பதை இறுதியாக ஒப்புக்கொண்டுவிட்டார்கள். ஒருநாள் நான் வங்கதேசம் திரும்புவேன். லவ் யூ, வங்கதேசம்" என்று ஷகிப் அல் ஹசன் பதிவிட்டார்.
ஷகிப் அல் ஹசன் குறித்து தாகாவைச் சார்ந்த சேனல் 24-ல் ஆசிஃப் மஹ்மூத் கூறுகையில், "வங்கதேசத்தின் கொடியை அவர் ஏந்துவதை அனுமதிக்க முடியாது. வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் நான் இதற்கு முன்பு நான் சொல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், ஷகிப் அல் ஹசன் வங்கதேசத்துக்காக மீண்டும் விளையாடக் கூடாது என்பது தான் வங்கதேச கிரிக்கெட் வாரியத்துக்கான எனது செய்தி.
வங்கதேசத்துக்குத் திரும்பவும் வங்கதேசத்துக்காக மீண்டும் விளையாடவும் ஒவ்வொரு முறை அவர் கேட்டபோதும் 2024 பொதுத்தேர்தலில் அவாமி லீக் கட்டாயமாகத் தன்னை வேட்பாளராக நிறுத்தியதாக அவர் கூறினார். தான் அரசியலில் ஈடுபடவில்லை என அவர் கூறினார். தனது தொகுதி மக்களுக்காகச் செயல்பட வேண்டும் என்பதற்காக தான் எம்.பி. ஆனதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆனால், அவாமி லீக் அரசியலில் அவர் ஈடுபட்டுள்ளார் என்பது தான் நிதர்சனம்" என்றார் அவர்.
ஷகிப் அல் ஹசன் விளக்கமளிக்கையில், "ஷேக் ஹசீனா கிரிக்கெட்டை மிகத் தீவிரமாகப் பார்க்கக்கூடியவர். கிரிக்கெட்டில் அவருடையத் தலையீடு இருந்துள்ளது. அரசியலுக்கு முன்பு, கிரிக்கெட் மூலமாகவே அவருடன் எனக்குப் பழக்கம். அந்தக் கண்ணோட்டத்திலேயே அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். வேறு எந்த நோக்கமும் இல்லை, யாரையும் தூண்டுவிட வேண்டும் என்ற முயற்சியும் இல்லை" என்றார் ஷகிப் அல் ஹசன்.
Shakib Al Hasan | Bangladesh | Bangladesh Cricket Board | Bangladesh Cricket |