

மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையை முதல்முறையாக வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது.
மகளிர் உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் நவி மும்பையில் ஞாயிற்றுக்கிழமை மோதின. மழை காரணமாக ஆட்டம் மாலை 5 மணிக்கு தான் தொடங்கியது. முக்கியமான டாஸை வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இந்திய அணியில் தொடக்க பேட்டர்களாக ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷெஃபாலி வர்மா களமிறங்கினார்கள். ஷெஃபாலி வர்மா அதிரடியாக விளையாடி ரன் ரேட்டை பார்த்துக்கொள்ள, அனுபவமிக்க ஸ்மிருதி மந்தனா களத்தில் நேரத்தைச் செலவிட்டு ரன் சேர்த்தார். முதல் 10 ஓவர்களில் இந்தியா 64 ரன்கள் எடுத்தது.
முதல் விக்கெட்டுக்கு 104 ரன்கள் சேர்த்த நிலையில், ஸ்மிருதி மந்தனா 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதே ஓவரில் ஷெஃபாலி வர்மா அரை சதம் அடித்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்று வருடங்களுக்குப் பிறகு இவர் அடிக்கும் முதல் அரை சதம் இது.
ஷெஃபாலி வர்மா அற்புதமான ஷாட்கள் மூலம் தனது வேலையைச் சரியாக செய்து வந்ததால், ரன் ரேட்டுக்கு எந்தப் பிரச்னையும் இல்லாமல் இருந்தது. சதத்தை அடித்துவிடுவார் என்று எதிர்பார்த்தபோது தான் 78 பந்துகளில் 87 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஷெஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் இணை 62 ரன்கள் சேர்த்தது. இவரைத் தொடர்ந்து ஜெமிமாவும் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் மற்றும் தீப்தி சர்மா 4-வது விக்கெட்டுக்கு 52 ரன்கள் சேர்த்தார்கள். இந்திய அணி 35 ஓவர்களில் 200 ரன்களை எட்டியது. அடித்தளமிட்ட தொடக்கத்தைப் பெரிய இன்னிங்ஸாக மாற்றாமல் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் ஹர்மன்பிரீத் கௌர். அமன்ஜோத் கௌரும் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால், 300 ரன்களை கடப்பது இந்திய அணிக்குச் சவாலானது.
ரிச்சா கோஷ் கடைசி நேரத்தில் அதிரடி காட்டி 24 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். இவர் கடைசி வரை களத்தில் நிற்காமல் 49-வது ஓவரில் ஆட்டமிழந்தார். இதனால், கடைசி ஓவரில் இந்திய அணியால் 6 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. தீப்தி சர்மா 58 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் ரன் அவுட் ஆனார்.
50 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்தது.
299 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் தென்னாப்பிரிக்கா களமிறங்கியது. அரையிறுதியில் சதமடித்த கேப்டன் லாரா வோல்வார்ட் இம்முறையும் நல்ல தொடக்கத்தைத் தந்து இந்தியாவுக்கு அச்சுறுத்தல் கொடுத்தார். முதல் விக்கெட்டுக்கு தென்னாப்பிரிக்கா 50 ரன்கள் சேர்த்து அதிரடி காட்டத் தொடங்கியது. இந்த நிலையில், அமன்ஜோக் கௌரின் அற்புதமான த்ரோவில் முதல் விக்கெட்டாக டஸ்மின் பிரிட்ஸ் ஆட்டமிழந்தார். ஸ்ரீசரனி பந்தில் பாஷ் டக் அவுட் ஆனார்.
இதன்பிறகு, வோல்வார்ட் மற்றும் சூனே லூஸ் 51 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து விளையாடினார்கள். விக்கெட் கிடைக்காததால், பகுதிநேரப் பந்துவீச்சாளர்களான ஷெஃபாலி வர்மாவிடம் பந்தைக் கொடுத்தார் ஹர்மன்பிரீத் கௌர்.
ஷெஃபாலியின் பொற்கரங்களால் சூனே லூஸ் மற்றும் மரிஸான் கப் அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்கள். இந்தியாவுக்கு இது மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
மறுமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும், லாரா வோல்வார்ட் அரை சதத்தைக் கடந்து இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார். சினாலோ ஜஃப்தா விக்கெட்டை தீப்தி சர்மா வீழ்த்தினார். 148 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தென்னாப்பிரிக்கா தடுமாறியது. கடைசி 20 ஓவர்களில் 149 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலை இருந்தது.
ராதா யாதவ் வீசிய 32-வது ஓவரில் டெர்க்சன் நோ-பால் மற்றும் ஃப்ரீ ஹிட்டில் அடுத்தடுத்து இரு சிக்ஸர்கள் அடிக்க, ஆட்டத்தில் மீண்டும் பதற்றம் அதிகரித்தது. லாரா போல்வார்ட் மற்றும் டெர்க்சன் இணை 61 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து அதிரடி காட்டிக்கொண்டிருந்த நேரத்தில் தீப்தி சர்மாவின் அற்புதமான யார்க்கரில் டெர்க்சன் 35 ரன்களுக்கு போல்டானார்.
இதே ஓவரில் வோல்வார்ட் சதத்தையும் அடித்தார். இவருடைய விக்கெட் இந்திய அணிக்கு தேவையாக இருந்தது. சதமடித்தவுடன் தீப்தி சர்மா பந்தில் சிக்ஸர் அடிக்கப் பார்த்து 101 ரன்களுக்கு அமன்ஜோத் கௌரின் சிறப்பான கேட்சால் ஆட்டமிழந்தார்.
இதன்பிறகு, இந்திய அணிக்கு இருந்த ஒரே அச்சுறுத்தல், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற லீக் சுற்றில் இந்தியாவிடம் இருந்து வெற்றியைப் பறித்த டி கிளெர்க் மட்டும் தான். இவருடைய கேட்ச் வாய்ப்பை ஜெமிமா தவறவிட, ஆட்டத்தில் பதற்றம் மேலும் அதிகரித்தது. ஆனால், தீப்தி சர்மாவின் ஓவரில் அவரே கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.
45.3 ஓவர்களில் 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது தென்னாப்பிரிக்கா. 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா. பேட்டிங்கில் அரை சதம் அடித்த தீப்தி சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்மூலம், மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையை முதல்முறையாக வென்று இந்திய அணி சாதனை படைத்தது. 2023ல் இந்திய ஆடவர் அணி அஹமதாபாதில் தவறவிட்டதை இந்திய மகளிர் அணி 2025-ல் நவி மும்பையில் வென்றுள்ளது.
Excellent all-round performances by Shafali Verma and Deepti Sharma helped India finally break their world title drought, as they secured their maiden ICC Women's World Cup title by beating first-time finalists South Africa by 52 runs in a clinical display at DY Patil Stadium in Navi Mumbai on Sunday.
IND v SA | Women's World Cup | Shafali Verma | Deepti Sharma | Harmanpreet Kaur | Laura Wolvaardt | Harmanpreet Kaur | Smiriti Mandhana |