தமிழ்நாடு அணிக்கு எதிரான ஆட்டத்தில் சௌராஷ்டிரம் அணி 203 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
2024-25 பருவத்துக்கான ரஞ்சி கோப்பை இன்று தொடங்கியது.
கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு - சௌராஷ்டிரம் இடையிலான ஆட்டத்தில் டாஸ் வென்ற சௌராஷ்டிரம் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
தொடக்க ஆட்டக்காரரான ஹார்விக் தேசாய் ரன் எதுவும் எடுக்காமல் சோனு யாதவ் பந்தில் வெளியேறினார். இதன் பிறகு சிராக் ஜானி நிதானமாக விளையாடி 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, புஜாரா 16, ஷெல்டன் ஜாக்சன் 15 ரன்களில் அடுத்தடுத்து வெளியேறினர்.
சாய் கிஷோர், சோனு யாதவ், முஹமது ஆகியோரின் அசத்தலான பந்துவீச்சில் வேகமாக விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது சௌராஷ்டிரம் அணி.
ஒருபக்கம் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தாலும், கடைசி வரை ஆட்டமிழக்காமல் விளையாடி சௌராஷ்டிரம் அணி 200 ரன்களை கடக்க உதவினார் அர்பித். சௌராஷ்டிரம் அணி 203 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அர்பித் 62 ரன்கள் எடுத்தார்.
தமிழ்நாடு தரப்பில் சோனு யாதவ், சாய் கிஷோர், முஹமது ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய தமிழ்நாடு அணிக்கு முதல் நாளில் 2 ஓவர்கள் மட்டுமே கிடைத்தது. இதில் விக்கெட்டை இழக்காத தமிழ்நாடு அணி, ரன் எதுவும் எடுக்கவில்லை.