தில்லி அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தின் முதல் நாள் முடிவில் தமிழக அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 379 ரன்கள் எடுத்துள்ளது
2024-25 பருவத்துக்கான ரஞ்சி கோப்பை அக்.11 அன்று தொடங்கியது.
சௌராஷ்டிரம் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் தமிழக அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதைத் தொடர்ந்து தமிழக அணி தனது 2-வது ஆட்டத்தில் தில்லியுடன் விளையாடி வருகிறது. இன்று தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தில்லி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
சாய் சுதர்சன் மற்றும் ஜெகதீசன் சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். இருவரும் சேர்ந்து ஓவருக்கு சராசரியாக 4 ரன்களை எடுத்துக்கொண்டே வந்தனர். தில்லி அணிக்கு தொடர்ந்து நெருக்கடி அளித்து, இருவரும் அரைசதம் அடித்தனர். ஒருவழியாக இந்த கூட்டணியை நவ்தீப் சைனி பிரித்தார். 39.1 ஓவர்கள் விளையாடிய இந்த ஜோடி 168 ரன்கள் எடுத்தது.
ஜெகதீசன் ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து சாய் சுதர்சன் - வாஷிங்டன் சுந்தர் கூட்டணி அமைத்தனர்.
அபாரமாக விளையாடிய சாய் சுதர்சன் சதமடித்தார். அவருக்கு பக்கபலமாக இருந்த வாஷிங்டன் சுந்தரும் கடைசி வரை விக்கெட்டை விடாமல் விளையாடினார். தொடர்ந்து அசத்தலாக விளையாடிய சாய் சுதர்சன் முதல்தர கிரிக்கெட்டில் தனது முதல் இரட்டைச் சதத்தை பதிவு செய்தார்.
முதல் நாள் முடிவில் தமிழக அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 379 ரன்கள் எடுத்துள்ளது. சாய் சுதர்சன் ஆட்டமிழக்காமல் 202 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் ஆட்டமிழக்காமல் 96 ரன்களும் எடுத்துள்ளனர்.