தமிழ்நாடு - சத்தீஸ்கர் இடையிலான ரஞ்சி கோப்பை ஆட்டம் டிராவில் முடிந்துள்ளது.
ரஞ்சி கோப்பையில் டி பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழக அணி சௌராஷ்டிரத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தில்லிக்கு எதிரான ஆட்டம் டிராவில் முடிந்தது.
இதைத் தொடர்ந்து கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு - சத்தீஸ்கர் இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்துள்ளது.
டாஸ் வென்ற சத்தீஸ்கர் அணி 500 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஆயுஷ் பாண்டே சதமடித்து 124 ரன்கள் குவித்தார். தமிழ்நாடு அணி தரப்பில் அஜித் ராம் 4 விக்கெட்டுகளையும், மணிமாறன் சித்தார்த் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதன் பிறகு விளையாடிய தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 259 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆண்ட்ரே சித்தார்த் ஆட்டமிழக்காமல் 55 ரன்களும், ஷாருக் கான் 50 ரன்களும் எடுத்தனர். சத்தீஸ்கர் அணி தரப்பில் ஷுப்மன் அகர்வால் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
241 ரன்கள் பின்தங்கியிருந்ததால், தமிழ்நாடு அணியை ஃபாலோ ஆன் செய்ய அழைத்தது சத்தீஸ்கர். இதன்படி, தமிழ்நாடு அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.
கேப்டன் ஜெகதீசன் அசத்தலாக விளையாடி அரைசதம் அடித்தார். வழக்கமாக கீழ்வரிசையில் களமிறங்கும் ஆண்ட்ரே சித்தார்த் 3-வது வரிசையில் களமிறங்கி 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதன் பிறகு விஜய் சங்கர் சிறப்பாக விளையாடி சதமடித்தார். தமிழ்நாடு அணி 2-வது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்த நிலையில், ஆட்டம் டிராவில் முடிந்தது. விஜய் சங்கர் ஆட்டமிழக்காமல் 106 ரன்கள் எடுத்தார்.
தமிழ்நாடு அணி 10 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.