

ரஞ்சி கோப்பைப் போட்டியில் மேகாலயா வீரர் ஆகாஷ் சௌதரி தொடர்ச்சியாக 8 சிக்ஸர்கள் விளாசி அதிவேகமாக அரை சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
ரஞ்சி கோப்பைப் போட்டியில் பிளேட் பிரிவு குரூப் சுற்றில் மேகாலயா, அருணாச்சலப் பிரதேச அணிகள் சூரத்தில் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தின் இரண்டாவது நாளில் மேகாலயா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 576 ரன்கள் எடுத்திருந்தபோது 8-வது பேட்டராக களத்துக்குள் வந்தார் ஆகாஷ் சௌதரி.
வேகப்பந்துவீச்சாளரான இவர், இடக்கை சுழற்பந்துவீச்சாளர் லிமர் டாபியின் ஓவரில் தொடர்ச்சியாக 6 சிக்ஸர்களை நொறுக்கிவிட்டார். மேலும், மற்றொரு சுழற்பந்துவீச்சாளர் டிஎன்ஆர் மோஹித் ஓவரிலும் அடுத்தடுத்து இரு சிக்ஸர்களை விளாசினார். இதன்மூலம், 11 பந்துகளில் அரை சதம் அடித்து சாதனை படைத்தார்.
மேற்கிந்தியத் தீவுகள் ஜாம்பவான் கேரி சோபர்ஸ், ரவி சாஸ்திரி வரிசையில் முதல் தர கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசிய மூன்றாவது வீரர் என்ற பெருமையை ஆகாஷ் சௌதரி பெற்றுள்ளார்.
தென்னாப்பிரிக்காவின் மைக் பிராக்டரும் முதல் தர கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 6 சிக்ஸர்களை விளாசியிருக்கிறார். ஆனால், 6 சிக்ஸர்களை அவர் இரு வேறு ஓவர்களில் அடித்தார்.
முதல் தர கிரிக்கெட்டில் 12 பந்துகளில் அரை சதம் அடித்ததே சாதனையாக இருந்தது. இங்கிலாந்தின் லீசெஸ்டர்ஷைர் அணியைச் சேர்ந்த வெய்ன் வைட் என்பவர் 2012-ல் எஸ்ஸெக்ஸ் அணிக்கு எதிராக இச்சாதனையைப் புரிந்தார். இதைத் தான் தற்போது ஆகாஷ் சௌதரி 1 பந்து வித்தியாசத்தில் முறியடித்திருக்கிறார்.
மேகாலயா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 628 ரன்கள் எடுத்திருந்தபோது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆகாஷ் சௌதரி 14 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். ஆகாஷ் சௌதரிக்கு இது 31-வது முதல் தர ஆட்டம். இதற்கு முன்பு இரு அரை சதங்களுடன் 14.37 சராசரியில் 503 ரன்கள் எடுத்திருந்தார். பந்துவீச்சில் 29.97 சராசரியில் 87 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
Meghalaya's Akash Choudhary hits 8 consecutive sixers in Ranji Trophy
Ranji Trophy | Meghalaya | Arunachal Pradesh | Akash Choudhary |