
விதர்பா பேட்டர் கருண் நாயர் ரஞ்சி கோப்பை இறுதிச் சுற்றில் சதமடித்துள்ளார்.
ரஞ்சி கோப்பை இறுதிச் சுற்றில் கேரளம், விதர்பா அணிகள் நாக்பூரில் விளையாடி வருகின்றன. முதல் இன்னிங்ஸில் விதர்பா 379 ரன்களும், கேரளம் 342 ரன்களும் எடுத்தன.
37 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வரும் விதர்பா, 4-வது நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்துள்ளது.
முதல் இன்னிங்ஸில் 86 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆன கருண் நாயர், இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்து 132 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். முதல் தர கிரிக்கெட்டில் கருண் நாயருக்கு இது 23-வது சதம்.
உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக மிரட்டலான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் கருண் நாயர், பிசிசிஐ தேர்வுக் குழுவின் கவனத்தை ஏற்கெனவே ஈர்த்துவிட்டார்.
ரஞ்சி கோப்பைக்கு முன்பு விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியில் அசாத்தியமாக பேட் செய்த கருண் நாயர் 7 இன்னிங்ஸில் 5 சதங்கள் உள்பட 752 ரன்கள் விளாசினார். சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணி, அப்போது தேர்வு செய்யப்படாமல் இருந்ததால், கருண் நாயர் அணியில் தேர்வு செய்யப்படுவதற்கான போட்டியில் இருந்தார்.
எனினும், இந்திய அணியில் போதிய இடம் இல்லாததால் கருண் நாயருக்கு ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்காமல் போனது. இருந்தபோதிலும், ஃபார்மை தொடர்ந்து அடுத்தடுத்து கடத்தி வரும் கருண் நாயர் ரஞ்சியிலும் கலக்கி வருகிறார். இறுதிச் சுற்றில் சதமடித்தது உள்பட இந்தப் பருவத்தில் மட்டும் அவர் அடித்த சதங்கள் 4.
நடப்பு ரஞ்சி கோப்பைப் பருவத்தில் இதுவரை 9 ஆட்டங்களில் விளையாடியுள்ள கருண் நாயர் 57.33 சராசரியில் 860 ரன்கள் குவித்து விளையாடி வருகிறார். ரஞ்சி கோப்பையில் ஒரு பருவத்தில் கருண் நாயர் 800 ரன்களை கடப்பது இதுவே முதன்முறை.
ஒருநாள் கிரிக்கெட்டில் இடம் கிடைக்காத கருண் நாயருக்கு ரஞ்சி கோப்பை சதங்கள் டெஸ்ட் அணியில் இடத்தைப் பெற்று தருமா...?