42 முறை ரஞ்சி கோப்பையை வென்ற மும்பையை வீழ்த்தி ஜம்மு & காஷ்மீர் அணி சாதனை படைத்துள்ளது.
2015-க்குப் பிறகு ரோஹித் சர்மா ரஞ்சி கோப்பையில் விளையாடியதால் அதிகக் கவனத்துக்கு ஆளானது மும்பை - ஜம்மு & காஷ்மீர் இடையிலான ரஞ்சி ஆட்டம்.
மும்பையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் மும்பை 120 ரன்களுக்குச் சுருண்டது. ஜம்மு & காஷ்மீர் அணி முதல் இன்னிங்ஸில் 206 ரன்கள் எடுத்து 86 ரன்கள் முன்னிலை பெற்றது.
மும்பை அணி 2-வது இன்னிங்ஸிலும் தடுமாறி 290 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா, ஜெயிஸ்வால், ரஹானே, ஷ்ரேயஸ் ஐயர், ஷிவம் துபே போன்ற மும்பையின் நட்சத்திர வீரர்கள் மீண்டும் தடுமாறினாலும் முதல் இன்னிங்ஸில் அரை சதமெடுத்த ஷர்துல் தாக்குர், 2-வது இன்னிங்ஸில் மேலும் சிறப்பாக விளையாடி சதமடித்தார். ஷர்துல் தாக்குர் 119 ரன்களும், தனுஷ் கோட்டியான் 62 ரன்களும் எடுத்தார்கள்.
ஜம்மு & காஷ்மீர் அணிக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதை 5 விக்கெட்டுகள் இழப்பில் 49 ஓவர்களில் அடைந்து சாதனை வெற்றியை நிகழ்த்தியது ஜம்மு & காஷ்மீர் அணி. இதற்கு முன்பு 2014-ல் விளையாடியபோதும் சரி இப்போது சரி, மும்பைக்கு எதிரான இரு ரஞ்சி ஆட்டங்களிலும் ஜம்மு & காஷ்மீர் அணியே வெற்றி பெற்றுள்ளது.