
ரஞ்சி கோப்பையில் சௌராஷ்டிரத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஜெகதீசன் சதம் அடிக்க முதல் இன்னிங்ஸில் தமிழ்நாடு அணி முன்னிலை பெற்றுள்ளது.
2024-25 பருவத்துக்கான ரஞ்சி கோப்பையில் கோவையில் நடைபெறும் ஆட்டத்தில் தமிழ்நாடு - சௌராஷ்டிரம் விளையாடி வருகின்றன. முதலில் பேட்டிங் செய்த சௌராஷ்டிரம் முதல் இன்னிங்ஸில் 203 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
தமிழ்நாடு அணி முதல் நாள் முடிவில் ரன் கணக்கைத் தொடங்கவில்லை. இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சாய் சுதர்சன் மற்றும் ஜெகதீசன் சிறப்பான தொடக்கத்தைத் தந்தார்கள். முதல் விக்கெட்டுக்கு 172 ரன்கள் சேர்த்தபோது, சாய் சுதர்சன் 82 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார்.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெகதீசன் சதம் அடித்து அசத்தினார். சதமடித்த பிறகு மேற்கொண்டு ரன் சேர்க்காமல் 100 ரன்களுக்கு உனத்கட் வேகத்தில் வீழ்ந்தார். நல்ல இன்னிங்ஸை விளையாடிய பாபா இந்திரஜித் 40 ரன்கள் எடுத்து உனத்கட் பந்தில் ஆட்டமிழந்தார்.
3 பேர் ஆட்டமிழந்தபோதிலும், தமிழ்நாடு அணி அதற்குள் முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தமிழ்நாடு அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 278 ரன்கள் எடுத்து 75 ரன்கள் முன்னிலையில் உள்ளது.