ரஞ்சி கோப்பையில் விளையாடி வரும் இந்திய டெஸ்ட் பேட்டர்கள் சொற்ப ரன்களில் வெளியேறி ஏமாற்றமளித்துள்ளார்கள்.
சொந்த மண்ணில் நியூசிலாந்து டெஸ்ட் தொடரை இழந்தது, 10 ஆண்டுகளுக்குப் பிறகு பிஜிடி தொடரை இழந்தது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறாதது என இந்திய அணி அண்மைக் காலமாக மோசமாக விளையாடி வருகிறது.
இந்த மோசமான செயல்பாட்டால், ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட மூத்த வீரர்களுடைய ஃபார்ம் விமர்சனத்துக்குள்ளானது. நியூசிலாந்து டெஸ்ட் தொடர் மற்றும் பிஜிடி தொடரில் மோசமான ஃபார்மில் இருந்த இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, சிட்னி டெஸ்டிலிருந்து விலகிக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து, இந்திய வீரர்கள் உள்நாட்டுப் போட்டிகளில் கட்டாயம் விளையாட வேண்டும் என பிசிசிஐ கட்டுப்பாடுகள் விதித்தது. ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெயிஸ்வால் மும்பைக்கு விளையாடத் தயாரானார்கள். ரிஷப் பந்த் தில்லிக்காக விளையாட தயாரானார். தில்லி கேப்டன் பொறுப்பை ஏற்க பந்த் மறுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின. ஷுப்மன் கில் பஞ்சாப் அணிக்காக விளையாடத் தயாரானது மட்டுமில்லாமல், அணியை வழிநடத்தவும் முன்வந்தார். ரவீந்திர ஜடேஜா சௌராஷ்டிரத்துக்காக விளையாடுகிறார்.
ரோஹித் சர்மா - ஜெயிஸ்வால்
ரஞ்சி கோப்பை அடுத்த சுற்று இன்று தொடங்கியது. அஜிங்க்யா ரஹானே தலைமையிலான மும்பை அணி ஜம்மு-காஷ்மீரை எதிர்கொண்டு வருகிறது. மும்பையில் நடைபெறும் ஆட்டத்தில் டாஸ் வென்ற ரஹானே பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க பேட்டர்களாக யஷஸ்வி ஜெயிஸ்வால், ரோஹித் சர்மா களமிறங்கினார்கள்.
ரோஹித் சர்மா 19 பந்துகளில் 3 ரன்களுக்கும் ஜெயிஸ்வால் 8 பந்துகளில் 4 ரன்களுக்கும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்கள். மும்பையிலுள்ள மற்ற மூத்த வீரர்களான ரஹானே, ஷ்ரேயஸ் ஐயர் உள்ளிட்டோரும் சொதப்ப, அந்த அணி 17.2 ஓவர்களில் 47 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது.
உணவு இடைவேளையில் மும்பை அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. தனுஷ் கோட்டியான் மற்றும் ஷார்துல் தாக்குர் கூட்டணி அமைத்து அணியைக் காப்பாற்றி வருகிறார்கள்.
ரிஷப் பந்த் - ரவீந்திர ஜடேஜா
டி பிரிவில் இடம்பெற்றுள்ள சௌராஷ்டிரம் - தில்லி அணிகள் ராஜ்கோட்டில் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற தில்லி கேப்டன் ஆயுஷ் பதோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். சௌராஷ்டிரத்துக்காக விளையாடும் ரவீந்திர ஜடேஜா இரு விக்கெட்டுகளைச் சாய்த்து நம்பிக்கையளித்தார்.
தில்லி அணிக்காக 5-வது பேட்டராக களமிறங்கிய ரிஷப் பந்த் 10 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். தில்லி அணி 39 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
55 ரன்களுக்குச் சுருண்ட கில் தலைமையிலான பஞ்சாப்
பஞ்சாப் அணியை ஷுப்மன் கில் வழிநடத்துகிறார். பெங்களூருவில் நடைபெறும் ஆட்டத்தில் டாஸ் வென்ற கர்நாடகம் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பஞ்சாப் தொடக்க பேட்டராக களமிறங்கிய ஷுப்மன் கில் 8 பந்துகளில் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மற்ற பேட்டர்களும் சொதப்பியதால், பஞ்சாப் அணி 29 ஓவர்களில் 55 ரன்களுக்குச் சுருண்டது.