

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்து தொடரை முழுமையாக இழந்தது.
இந்தியாவுக்குப் பயணம் செய்துள்ள தென்னாப்பிரிக்க அணி முதலில் டெஸ்ட் தொடரில் விளையாடியது. கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் தென்னாப்பிரிக்க அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 124 ரன்கள் என்ற வெற்றி இலக்கை அடைய முடியாமல் 93 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்தியா.
இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெற்று தொடரைச் சமன் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்கியது. ஷுப்மன் கில் இல்லாததால், கேப்டன் பொறுப்பை ரிஷப் பந்த் ஏற்றார்.
டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 489 ரன்கள் குவித்தது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 201 ரன்களுக்கு சுருண்டது.
288 ரன்கள் பின்தங்கியிருந்த போதும் இந்தியாவை ஃபாலோ ஆன் செய்யச் சொல்லாமல் இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கை மேற்கொண்டது தென்னாப்பிரிக்கா. 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்து இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. இந்திய அணியின் வெற்றிக்கு 549 ரன்கள் என்ற மிகக் கடினமான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
நான்காவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 27 ரன்கள் எடுத்திருந்தது. சாய் சுதர்சன் 2 ரன்களுடனும் நைட் வாட்ச்மேனாக களமிறக்கப்பட்ட குல்தீப் யாதவ் 4 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.
இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில் சாய் சுதர்சன் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு சற்று தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார். 139 பந்துகளை எதிர்கொண்ட அவர் 14 ரன்கள் எடுத்தார். ரவீந்திர ஜடேஜா அரை சதம் அடித்து 54 ரன்கள் எடுத்தார். மற்ற பேட்டர்கள் சைமன் ஹார்மரிடம் சரணடைந்தார்கள்.
இரண்டாவது இன்னிங்ஸில் 140 ரன்களுக்கு சுருண்டது இந்திய அணி. சைமன் ஹார்மர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம், 408 ரன்கள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியைப் பெற்றது தென்னாப்பிரிக்கா. மேலும், இந்திய மண்ணில் 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்று வரலாற்றுச் சாதனையையும் படைத்தது.
முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் 93 ரன்கள் விளாசி பந்துவீச்சில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய மார்கோ யான்சென் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இரு டெஸ்டுகளிலும் மொத்தம் 17 விக்கெட்டுகளை வீழ்த்திய சைமன் ஹார்மர் தொடர் நாயகன் விருதை வென்றார்.
இந்திய அணி தனது சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை முழுமையாக இழப்பது இது மூன்றாவது முறை. இரு முறை தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இழந்துள்ளது. இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்புக்கு கௌதம் கம்பீர் வந்த பிறகு நியூசிலாந்துக்கு எதிராக கடந்தாண்டு டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது இந்திய அணி. தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மீண்டும் தொடரை முழுமையாக இழந்துள்ளது. இதன்மூலம், தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் கௌதம் கம்பீரின் இடம் பெரும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.
தென்னாப்பிரிக்காவை இதுவரை 12 டெஸ்டுகளில் வழிநடத்தியுள்ள டெம்பா பவுமா 11 டெஸ்டுகளில் வெற்றியைப் பெற்றுள்ளார். ஒரு டெஸ்ட் டிராவில் முடிந்துள்ளது. இதன்மூலம், தோல்வியைச் சந்திக்காத டெஸ்ட் கேப்டனாக டெம்பா பவுமா தொடர்கிறார்.
India Suffer Humiliating 408-Run Loss in Guwahati, Lose Series 0–2 against Temba Bavuma led South Africa sparks criticism over Team India and Team India's management.
IND v SA | India v South Africa | Simon Harmer | Marco Jansen |Guwahati Test | Ravindra Jadeja | Rishabh Pant | Gautam Gambhir | Temba Bavuma |