74 ரன்களுக்கு சுருண்ட தென்னாப்பிரிக்கா: பாண்டியா பலத்தால் வென்ற இந்தியா! | IND v SA |

சர்வதேச டி20யில் தென்னாப்பிரிக்காவின் குறைந்தபட்ச ஸ்கோர் இது.
Pandya rescues India; sets South Africa 176-run target in first T20I
பேட்டிங்கில் இந்திய அணியைக் காப்பாற்றிய ஹார்திக் பாண்டியா
2 min read

முதல் டி20யில் தென்னாப்பிரிக்காவை 74 ரன்களுக்கு சுருட்டிய இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடியது. டெஸ்ட் தொடரை தென்னாப்பிரிக்காவும் ஒருநாள் தொடரை இந்தியாவும் வென்றன.

இரு அணிகளுக்கு இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் கட்டாக்கில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

ஆடுகளம் பேட்டிங்குக்கு சற்று அசௌகரியமாக இருந்ததால், இந்திய பேட்டர்கள் தடுமாறினார்கள். எந்தவொரு பேட்டராலும் இயல்பாக ரன் எடுக்க முடியவில்லை. அபிஷேக் சர்மா 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். திலக் வர்மா 32 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். அக்‌ஷர் படேல் 21 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தார். இந்த பேட்டிங் காரணமாக 13.5 ஓவர்களில் தான் இந்தியா 100 ரன்களை தொட்டது.

ஆனால், காயத்திலிருந்து குணமடைந்து இந்திய அணிக்குத் திரும்பிய ஹார்திக் பாண்டியா ருத்ரதாண்டவ பேட்டிங்கை வெளிப்படுத்தினார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் 28 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார். இதில் 6 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் அடக்கம்.

பாண்டியாவின் அதிரடி பேட்டிங் காரணமாக, 150 ரன்களை எடுப்பது சவாலாக இருந்த நிலையிலிருந்து, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது இந்தியா.

தென்னாப்பிரிக்காவின் லுங்கி என்கிடி 3 விக்கெட்டுகளையும் லுதோ சிபம்லா 2 விக்கெட்டுகளையும் டோனோவன் ஃபெரெய்ரா 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்கள்.

தென்னாப்பிரிக்க பேட்டிங்கில் தொடக்க பேட்டர்களாக குயின்டன் டி காக், கேப்டன் எய்டன் மார்க்ரம் களமிறங்கினார்கள். இரண்டாவது பந்திலேயே அர்ஷ்தீப் சிங் வேகத்தில் டக் அவுட் ஆனார் டி காக். இதிலிருந்து விக்கெட்டுகளுக்கான கதவுகள் மூடப்படவே இல்லை.

எந்தப் பந்துவீச்சாளர் பந்துவீச வந்தாலும், விக்கெட்டை பரிசாகக் கொடுத்துக் கிளம்பினார்கள் தென்னாப்பிரிக்க பேட்டர்கள். பவர்பிளே முடிவதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது தென்னாப்பிரிக்கா. பவர்பிளே முடிந்தவுடன் முதல் பந்தில் டேவிட் மில்லர் ஆட்டமிழந்தார். எந்தவொரு பேட்டரும் தாக்குப்பிடித்து விளையாடவில்லை. 12.3 ஓவர்களில் 74 ரன்களுக்கு சுருண்டது தென்னாப்பிரிக்கா. சர்வதேச டி20யில் தென்னாப்பிரிக்காவின் குறைந்தபட்ச ஸ்கோர் இது.

இந்திய அணியில் பந்துவீசிய 6 பந்துவீச்சாளர்களும் விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார்கள். இதன்மூலம், இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. ஆட்டநாயகன் விருதை ஹார்திக் பாண்டியா வென்றார்.

1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ள நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான அடுத்த டி20 புதிய சண்டிகரில் டிசம்பர் 11 அன்று நடைபெறுகிறது.

An all-round show from all-rounder Hardik Pandya on return and a fine show by pacers and spinners powered India to a 101-run win over South Africa in the first T20I at Cuttack on Tuesday.

IND v SA | Hardik Pandya | Jasprit Bumrah | 1st T20I | Cuttack T20I | India v South Africa |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in