ரஞ்சி கோப்பையில் சத்தீஸ்கருக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ்நாடு அணி ஃபாலோ ஆன் செய்து விளையாடி வருகிறது.
ரஞ்சி கோப்பையில் டி பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழக அணி சௌராஷ்டிரத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தில்லிக்கு எதிரான ஆட்டம் டிராவில் முடிந்தது.
மூன்றாவது ஆட்டத்தில் சத்தீஸ்கரை கோவையில் எதிர்கொண்டு வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த சத்தீஸ்கர் 500 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஆயுஷ் பாண்டே சதமடித்து 124 ரன்கள் குவித்தார்.
தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸ் பேட்டிங் செய்தது. கேப்டன் ஜெகதீசன் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முன்வரிசை பேட்டர்களில் யாரும் அரைசதம் அடிக்காததால், தமிழ்நாடு அணி தடுமாறியது. ஷாருக் கான் மற்றும் ஆண்ட்ரே சித்தார்த் இணை ஃபாலோ ஆனை தவிர்க்க உதவும் என எதிர்பார்க்கப்பட்டது. அரைசதம் அடித்த ஷாருக் கான் 50 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சித்தார்த் அரைசதம் அடித்து 55 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாலும், கடைசிநிலை பேட்டர்கள் ஒத்துழைப்பு தரவில்லை. முதல் இன்னிங்ஸில் தமிழ்நாடு அணி 259 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
241 ரன்கள் பின்தங்கியிருந்ததால், தமிழ்நாடு அணியை ஃபாலோ ஆன் செய்ய அழைத்தது சத்தீஸ்கர். இதன்படி, தமிழ்நாடு அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் தமிழ்நாடு அணி 1 விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள் எடுத்து இன்னும் 170 ரன்கள் பின்தங்கியுள்ளது. கேப்டன் ஜெகதீசன் 28 ரன்களுடனும் ஆண்ட்ரே சித்தார்த் 36 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளார்கள்.