வைபவ் சூர்யவன்ஷிக்கு ரூ. 10 லட்சம்: பிஹார் முதல்வர் நிதிஷ் குமார்

"இந்தியாவுக்காகப் புதிய சாதனைகளைப் படைத்து நாட்டுக்கு நிறைய புகழ் சேர்க்க வாழ்த்துகிறேன்."
வைபவ் சூர்யவன்ஷிக்கு ரூ. 10 லட்சம்: பிஹார் முதல்வர் நிதிஷ் குமார்
1 min read

ஐபிஎல் போட்டியில் 35 பந்துகளில் சதமடித்த வைபவ் சூர்யவன்ஷிக்கு ரூ. 10 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைடன்ஸ் மோதின. இதில் 14 வயது இளம் பேட்டர் சூர்யவன்ஷி 35 பந்துகளில் சதமடித்து ஐபிஎல் போட்டியில் குறைந்த பந்துகளில் சதமடித்த இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார். மேலும், ஆடவர் டி20யில் சதமடித்த இளம் வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

அசாத்தியமான சாதனைகளைப் படைப்பது கிரிக்கெட் விளையாட்டின் யதார்த்தம் என்றால், சூர்யவன்ஷி அவற்றை 14 வயதிலேயே படைத்து கிரிக்கெட் உலகை மிரள வைத்துள்ளார்.

பிஹாரைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷிக்கு பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் ரூ. 10 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

"பிஹாரைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷிக்கு வாழ்த்துகள். ஐபிஎல் போட்டியில் குறைந்த வயதில் சதமடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். தனது திறமை மற்றும் கடின உழைப்பால் இந்தியாவின் புதிய எதிர்காலமாக மாறியுள்ளார். இவரை எண்ணி அனைவரும் பெருமை கொள்கிறோம்.

வைபவ் சூர்யவன்ஷி மற்றும் அவருடைய தந்தையை 2024-ல் சந்தித்தேன். வைபவ் சூர்யவன்ஷியின் பிரகாசமான எதிர்காலத்துக்காக அப்போது நான் வாழ்த்து கூறினேன். ஐபிஎல் போட்டியில் அட்டகாசமாக செயல்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அலைபேசி வாயிலாகவும் தொடர்புகொண்டு பேசினேன். பிஹாரைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரரான வைபவ் சூர்யவன்ஷிக்கு மாநில அரசால் ரூ. 10 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும். இந்தியாவுக்காகப் புதிய சாதனைகளைப் படைத்து நாட்டுக்கு நிறைய புகழ் சேர்க்க வாழ்த்துகிறேன்" என்று பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in