ஆஸ்திரேலிய யு-19 அணிக்கு எதிரான டெஸ்டில் 58 பந்தில் சதமடித்து 13 வயதான இந்திய வீரர் சாதனை படைத்துள்ளார்.
ஆஸ்திரேலிய யு-19 - இந்திய யு-19 அணிகளுக்கு இடையிலான 3 ஒருநாள் ஆட்டங்கள் கொண்ட தொடரை முழுமையாக வென்றது இந்திய அணி.
இதைத் தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் செப். 30 அன்று சென்னையில் தொடங்கியது.
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 293 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார் வைபவ் சூர்யவன்ஷி. 13 வயதே ஆன இவர் 58 பந்துகளில் 14 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் அதிவேக சதத்தை பதிவுசெய்து சாதனை படைத்தார்.
பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த இவர் சர்வதேச கிரிக்கெட்டில் சதமடித்த இளம் வீரர் எனும் சாதனையை படைத்துள்ளார்.
மேலும், அனைத்து வடிவிலான யு-19 கிரிக்கெட்டில் அதிவேகமாக சதம் அடித்த 2-வது வீரர் எனும் சாதனையையும் படைத்துள்ளார். முதல் வீரர் - மொயீன் அலி (2005-ல் 56 பந்துகளில் சதமடித்தார்).
முன்னதாக, கடந்த ஆண்டு இளம் வயதில் ரஞ்சி கோப்பையில் விளையாடிய 4-வது வீரர் எனும் சாதனையையும் படைத்தார். அப்போது அவருக்கு வயது 12. இந்நிலையில் தற்போது சர்வதேச கிரிக்கெட்டிலும் சாதனை படைத்துள்ளார்.
ஆஸ்திரேலிய யு-19 அணிக்கு எதிரான டெஸ்டில் 212 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.