நேபாளத்தில் சமூக வலைத்தளங்கள் தடை : கிளர்ந்தெழுந்த மக்கள் போராட்டம் | Nepal | Gen Z Protest |

சமூக வலைத்தள தடை மற்றும் அரசின் ஊழலை எதிர்த்து மக்கள் போராடி வருவதால் பரபரப்பு...
நேபாளத்தில் சமூக வலைத்தளங்கள் தடை : கிளர்ந்தெழுந்த மக்கள் போராட்டம் | Nepal | Gen Z Protest |
ANI
1 min read

நேபாளத்தில் பேஸ்புக், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட 26 சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து மக்கள் போராட்டம் வெடித்துள்ள நிலையில், போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேபாளத்தில் இயங்கும் சமூக வலைத்தளங்கள் அனைத்தும் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் விதிமுறைகளுக்கு உட்பட்டுப் பதிவு செய்ய வேண்டும் என்று அந்நாட்டு பிரதமர் கே.பி சர்மா ஒலி தலைமையிலான அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதற்கு 7 நாட்கள் கெடு விதிப்பட்ட நிலையில் கடந்த செப்டம்பர் 5 அன்று பதிவு செய்யாமல் இருந்த வாட்ஸ்ஆப், பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிறுவனங்கள் பதிவு செய்யும் வரையில் தடை நடவடிக்கை தொடரும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அரசின் இந்த முடிவு சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், நேபாள அரசை ஊழல் மிக்க அரசு என்று விமர்சித்து மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

குறிப்பாக இளைஞர்கள் சமூக வலைத்தளங்களைத் தடை செய்வதன் மூலம் அரசு பேச்சுரிமையை மறுப்பதாகக் குற்றம்சாட்டி போராடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று (செப். 8) போராட்டக்காரர்கள் நாடாளுமன்றம் வளாகத்தை முற்றுகையிட்டுப் போராட முயன்றனர். அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, காவல்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். மேலும், கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தைக் கலைத்தனர். இதனால் ஏற்பட்ட கலவரம் காரணமாக 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்நாட்டில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், காத்மண்டு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கெனவே கடந்த 2008-ல் தான் நேபாளம் மன்னராட்சியில் இருந்து விடுதலை அடைந்த நிலையில், தற்போது கம்யூனிஸ்ட் கட்சி அந்நாட்டில் ஆட்சியில் இருக்கிறது. இதனால் கம்யூனிஸ்ட் ஆட்சியில் ஊழல் அதிகரித்து வருவதாக நாட்டுக்குள் பல கிளர்ச்சிகள் அவ்வப்போது எழுந்து வந்தன. அந்தப் போராட்டத்துடன் சமூக வலைத்தள தடையை எதிர்த்த ஜென் ஸி போராட்டமும் இணைந்துள்ளதால் நேபாளத்தில் பரபரப்பு நிலவுகிறது.

Nepal | Gen Z Protest | Social Media Ban | Nepal youth protest | Kathmandu |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in