42-வது முறையாக ரஞ்சி கோப்பையை வென்ற மும்பை அணி

169 ரன்கள் வித்தியாசத்தில் விதர்பா அணியை வீழ்த்தி ரஞ்சி கோப்பையை வென்றது மும்பை அணி.
42-வது முறையாக ரஞ்சி கோப்பையை வென்ற மும்பை அணி
42-வது முறையாக ரஞ்சி கோப்பையை வென்ற மும்பை அணி@BCCIdomestic

விதர்பா அணியை வீழ்த்தி 42-வது முறையாக ரஞ்சி கோப்பையை வென்றது மும்பை அணி.

மும்பை - விதர்பா இடையிலான ரஞ்சி கோப்பை இறுதிச்சுற்று மார்ச் 10 அன்று தொடங்கியது.

டாஸ் வென்ற விதர்பா அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதல் இன்னிங்ஸில் மும்பை அணி 224 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஷார்துல் தாக்குர் 75 ரன்களும், பிரித்வி ஷா 46 ரன்களும் எடுத்தனர். விதர்பா அணியில் யஷ் தாக்குர், ஹர்ஷ் துபே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதன் பிறகு முதல் இன்னிங்ஸை விளையாடிய விதர்பா அணி மும்பை அணியின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 105 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக யஷ் ராதோட் 27 ரன்கள் எடுத்தார். மும்பை அணி தரப்பில் கோட்டியன், ஷம்ஸ் முலானி மற்றும் குல்கர்னி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து 119 ரன்கள் முன்னிலையுடன் மும்பை அணி 2-வது இன்னிங்ஸை விளையாடியது. ஆரம்பத்தில் இரண்டு விக்கெட்டுகளை வேகமாக இழந்தாலும், முஷீர் கான், ஸ்ரேயஸ் ஐயர், ரஹானே மற்றும் முலானி ஆகியோரின் அபார ஆட்டத்தால் 418 ரன்கள் குவித்தது.

முஷீர் கான் 10 பவுண்டரிகளுடன் 136 ரன்களும், ஸ்ரேயஸ் ஐயர் 95 ரன்களும், ரஹானே 73 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க, முலானி 50 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். விதர்பா அணியில் அதிகபட்சமாக ஹர்ஷ் துபே 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

538 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய விதர்பா அணி ஆரம்பம் முதல் நிதானமாக விளையாடியது. ஒரு கட்டத்தில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கருண் நாயர் மற்றும் கேப்டன் அக்‌ஷய் வாத்கர் அருமையான கூட்டணியை அமைத்தனர்.

கருண் நாயர் 74 ரன்கள் எடுத்து வெளியேற, அக்‌ஷய் வாத்கர்- ஹர்ஷ் துபே ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். 5-வது நாளில் இருவரும் சிறிது தாக்குப்பிடித்து மும்பை அணிக்கு நெருக்கடி அளித்தார்கள். அக்‌ஷய் வாத்கர் 102 ரன்களும், துபே 65 ரன்களும் எடுத்தனர். எனினும் இவ்விருவரும் அடுத்தடுத்து வெளியேற அடுத்த வந்த யாரும் பெரியளவில் ரன்களை அடிக்கவில்லை. இதனால் 368 ரன்களுக்கு ஆட்டமிழந்தது விதர்பா அணி.

இதன் மூலம் 169 ரன்கள் வித்தியாசத்தில் விதர்பா அணியை வீழ்த்தி 42-வது முறையாக ரஞ்சி கோப்பையை வென்றது மும்பை அணி.

முஷீர் கான் ஆட்டநாயகனாகத் தேர்வானார். இப்போட்டியில் 502 ரன்கள் அடித்து, 29 விக்கெட்டுகளை வீழ்த்திய மும்பையின் தனுஷ் கோட்டியன் தொடர் நாயகன் விருதை வென்றார்.

கடைசியாக 2015-16 ரஞ்சி கோப்பையை வென்ற மும்பை அணி தற்போது 8 ஆண்டுகளுக்குப் பிறகு ரஞ்சி கோப்பையை வென்றுள்ளது. 1934-ல் முதல் ரஞ்சி கோப்பையை வென்ற மும்பை அணி இதுவரை 42 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in