பழங்குடியினர் குறித்து பேசிய கருத்துக்காக நடிகர் விஜய் தேவரகொண்டா மீது எஸ்சி/எஸ்டி (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சூர்யா நடிப்பில் கடந்த மே மாதம் வெளியான திரைப்படம் ரெட்ரோ. இப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்ச்சியில் விஜய் தேவரகொண்டா கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை 500 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்குடியினரின் போருடன் ஒப்பிட்டுப் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அசோக் ரத்தோட் என்று அறியப்படும் பழங்குடியினர் கூட்டு நடவடிக்கைக் குழு மாநிலத் தலைவர், விஜய் தேவரகொண்டா மீது புகார் அளித்தார். விஜய் தேவரகொண்டாவின் பேச்சு பழங்குடியினரின் மனதைப் புண்படுத்தியதாகப் புகாரளிக்கப்பட்டது.
இந்தப் புகாரின் அடிப்படையில் எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் விஜய் தேவரகொண்டா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முன்பு இந்த விவகாரம் தொடர்பாக கடந்த மே 3 அன்று விஜய் தேவரகொண்டா வருத்தம் தெரிவித்திருந்தார். எந்தவொரு சமூகத்தையும் குறிப்பாக பழங்குடியினரைக் குறிவைக்கும் அல்லது புண்படுத்தும் நோக்கம் தனக்கு இல்லை என்று எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும் தனது செய்தி தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருந்தால் அல்லது புண்படுத்தியிருந்தால், வருத்தம் தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.