வெற்றி மாறனின் பேர்ட் கேர்ள் (Bad Girl) செப்டம்பர் 5-ல் வெளியீடு! | Vetri Maaran

படத்துக்கு தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளதாகவும் படக் குழு தெரிவித்துள்ளது.
வெற்றி மாறனின் பேர்ட் கேர்ள் (Bad Girl) செப்டம்பர் 5-ல் வெளியீடு! | Vetri Maaran
1 min read

வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகியுள்ள பேர்ட் கேர்ள் படம் செப்டம்பர் 5 அன்று வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி அறிவித்துள்ளது.

அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் இயக்கியுள்ள திரைப்படம் பேட் கேர்ள். பிரபல இயக்குநர்கள் வெற்றி மாறன் மற்றும் அனுராக் காஷ்யப் படத்தைத் தயாரித்துள்ளார்கள். அஞ்சலி சிவராமன், ஷாந்தி பிரியா, டீஜே அருணாச்சலம், சரண்யா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.

டீசரும் சர்ச்சையும்

படத்தின் டீசர் கடந்த ஜனவரி மாதமே வெளியானது. பிரீத்தா ஜெயராமன், ஜகதீஷ் ரவி மற்றும் பிரின்ஸ் ஆண்டர்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார்கள். அமித் திரிவேதி இசையமைத்துள்ளார். படத்தொகுப்பாளர் ராதா ஸ்ரீதர்.

டீசர் வெளியான பிறகு படத்துக்கு ஆதரவும் வந்தன, விமர்சனமும் வந்தன. குறிப்பாக, பிராமண சமூகத்தைச் சேர்ந்த பெண்ணாக வரும் முக்கியக் கதாபாத்திரத்தைப் படத்தில் காட்டிய விதத்தைப் பலர் விமர்சித்து வந்தார்கள்.

சர்வதேச திரைப்பட விழாக்களில் குவிந்த பாராட்டுகள்

இருந்தபோதிலும், சர்வதேச திரைப்பட விழாக்களில் பேர்ட் கேர்ள் படம் பாராட்டுகளை பெற்று வந்தது. ரோட்டர்டம் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த ஆசியப் படத்துக்கான விருதை வென்றது. ஸ்பெயினில் வேலன்சியா சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த முழு நீளப் படத்துக்கான இளம் ஜூரி விருதை வென்றது.

இந்தப் படம் செப்டம்பர் 5 அன்று வெளியாகும் என படக் குழு அறிவித்துள்ளது. படத்துக்கு தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளதாகவும் படக் குழு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: பேட் கேர்ள் ஒரு துணிச்சலான படம்: பா. இரஞ்சித்

முன்னதாக, இப்படத்துக்கு தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்கக் கூடாது என கோவையைச் சேர்ந்த ராஷ்ட்ரீய சனாதன சேவா சங்கத்தின் நிறுவனர் ரமாநாத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த பிப்ரவரியில் தணிக்கை வாரியம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, தணிக்கை வாரியச் சான்றிதழுக்காகப் படம் சமர்ப்பிக்கப்படவில்லை எனக் கூறப்பட்டது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in