
பேட் கேர்ள் ஒரு துணிச்சலான புத்துணர்ச்சியைத் தரக்கூடிய படம் என இயக்குநர் பா. இரஞ்சித் பாராட்டியுள்ளார்.
அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் இயக்கியுள்ள திரைப்படம் பேட் கேர்ள். பிரபல இயக்குநர்கள் வெற்றிமாறன் மற்றும் அனுராக் காஷ்யப் படத்தைத் தயாரித்துள்ளார்கள். படத்தின் டீசர் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியானது.
டீசர் வெளியான பிறகு படத்துக்கு ஆதரவும் வந்தன, விமர்சனமும் வந்தன. குறிப்பாக, பிராமண சமூகத்தைச் சேர்ந்த பெண்ணாக வரும் முக்கியக் கதாபாத்திரத்தைப் படத்தில் காட்டிய விதத்தைப் பலர் விமர்சித்து வருகிறார்கள். இதனிடையே படத்தைப் பார்த்துவிட்டதாக் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட இயக்குநர் பா. இரஞ்சித், படத்துக்குப் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
"பேட் கேர்ள் படத்தைப் பார்க்க நேர்ந்தது. உண்மையில் துணிச்சலான, புத்துணர்ச்சியைத் தரக்கூடிய படம். இப்படியொரு துணிச்சலான கதைக்கு துணை நின்றதற்காக, இயக்குநர் வெற்றிமாறனுக்கு மகத்தான பாராட்டுகள். பெண்களுடையப் போராட்டங்களையும் சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளையும் இந்தப் படம் தனித்துவமான முறையில் புதிய சினிமா பாணியின் அலையோட்டத்தின் மூலம் மிகவும் வலிமையாகக் காட்டியுள்ளது. அஞ்சலி சிவராமன் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்தப் படத்தைத் தவறவிடாதீர்கள்" என்று பா. இரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.