படங்களுக்குத் தமிழில் பெயர் சூட்டுங்கள்: வைரமுத்து

தமிழில் சொற்களுக்கா பஞ்சம்? தமிழில் தலைப்புகளுக்காக பஞ்சம்? நல்ல பெயர்களை, தனித்துவமான பெயர்களை ஏன் நீங்கள்...
வைரமுத்து
வைரமுத்து@Vairamuthu

தற்போதைய தமிழ் படங்களின் தலைப்புகளைப் பார்க்கும்போது துக்கப்படுகிறேன் என பாடலாசிரியர் வைரமுத்து பேசியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற ‘பனை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டார். இப்படத்தில் இமான் அண்ணாச்சி, கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடல்களை வைரமுத்து எழுதியுள்ளார்.

இந்நிலையில் இவ்விழாவில் பேசிய வைரமுத்து, “தற்போதைய தமிழ்ப் படங்களின்பெயர்களைப் பார்த்தால் துக்கப்படுகிறேன். வெட்கமும் படுகிறேஎன். அந்தப் பெயர் எனக்கு ஒன்றையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. அது வெறும் ஒரு சொல்லாக இருக்கிறது. தமிழில் சொற்களுக்கா பஞ்சம்? தமிழில் தலைப்புகளுக்காக பஞ்சம்? நல்ல பெயர்களை தனித்துவமான பெயர்களை ஏன் நீங்கள் சூட்டக் கூடாது என்று பார்க்கிறேன். பத்திரிகைகளில் அதிகாலை செய்திகளைப் புரட்டிப் பார்க்கும் போது, தலைப்புகளைப் பார்க்கிறபோது அடுத்தப் பக்கம் செல்வதற்குள் அந்தத் தலைப்பு ஒரு மின்னலைப் போல் என் மூளையைக் கடந்து முடித்து விடுவதைப் பார்க்கிறேன். தலைப்பு என்றால் நெஞ்சில் தைக்க வேண்டாமா? என் இருதயத்தில் சென்று பசை போட்டு ஒட்டிக்கொள்ள வேண்டாமா? பழைய படங்களில் தலைப்புகளைப் பார்த்தால் அந்தத் தலைப்பே ஒரு கதை சொல்லும். எனவே தமிழ்ப் படங்களுக்கு தமிழில் பெயர் சூட்டுங்கள் என இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் கதாசிரியர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். இது தமிழ் மக்களின் வேண்டுகோள்” என்றார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் இளையராஜா விவகாரம் குறித்து கேட்டதற்கு, “மேடைகளில் சர்ச்சையை உருவாக்க நான் விரும்பியதில்லை. நான் சர்ச்சைக்கு பிறந்தவனில்லை. சர்ச்சைகள் உண்டாக்கப்படுகின்றன” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in