தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிட பணிகளுக்காக நடிகர் சிவகார்த்திகேயன் ரூ. 50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.
இது தொடர்பாக நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் சிவகார்த்திகேயன் நடிகர் சங்க புதிய கட்டிட பணிகளை தொடர்வதற்காக சங்கத்தின் வைப்புநிதியாக தனது சொந்த வருமானத்தில் இருந்து ரூ.50 லட்சத்துக்கான காசோலையை தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் மற்றும் பொருளாளர் கார்த்தியிடம் வழங்கினார். அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி பற்றாக்குறை காரணமாக பல ஆண்டுகளாக கட்டிடப் பணிகள் நடைபெறாமல் இருந்த நிலையில் நேற்று தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடப் பணிகள் மீண்டும் தொடங்கியது. இந்நிலையில் இதற்கான நிதியை நடிகர்கள் பலரும் வழங்கி வருகின்றனர்.