தனி மனிதரின் நியாயமான உணர்வுக்கு மதிப்பளியுங்கள்: ஜி.வி. பிரகாஷ்

"இருவரும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டு பிரிந்ததன் பின்னணியையும், காரணங்களையும் என்னுடன் நெருங்கிய பழகிய நண்பர்கள், உறவினர்கள் நன்கறிவார்கள்".
ஜி.வி. பிரகாஷ்
ஜி.வி. பிரகாஷ்@gvprakash

ஒவ்வொரு தனி மனிதரின் நியாயமான உணர்வுக்கும் மதிப்பளியுங்கள் என இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் கூறியுள்ளார்.

தங்களின் 11 வருட திருமண உறவு முடிந்துவிட்டதாக பிரபல இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷும், பாடகி சைந்தவியும் அறிவித்தனர். இதைத் தொடர்ந்து ரசிகர்கள் பல்வேறு விமர்சனங்களை முன் வைத்தனர். இந்நிலையில் இது குறித்து ஜி.வி. பிரகாஷ் தனது எக்ஸ் தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஜி.வி. பிரகாஷ் கூறியதாவது:

“புரிதலும், போதுமான விவரங்கள் இல்லாமலும் அனுமானத்தின் பேரில் இரு மனங்கள் இணைவது, பிரிவது குறித்து பொதுவெளியில் விவாதிக்கப்படுது துரதிஷ்டவசமானது.

பிரபலமான நபராக இருப்பதாலே ஒருவரின் தனிப்பட்ட வாழ்விற்குள் அத்துமீறி நுழைந்து தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வைப்பதும் ஏற்புடையதல்ல.

தங்களின் கற்பனைக்கு வார்த்தைகள் மூலம் வடிவம் கொடுத்து சமூக ஊடகங்களில் வெளிப்படுத்துவதால் அது "யாரோ ஒரு தனிநபரின்" வாழ்க்கையை பாதிக்கும் என்பதை உணராத அளவுக்கு தமிழர் மாண்பு குறைந்து விட்டதா?

இருவரும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டு பிரிந்ததன் பின்னணியையும், காரணங்களையும் என்னுடன் நெருங்கிய பழகிய நண்பர்கள், உறவினர்கள் நன்கறிவார்கள். அனைவரிடமும் கலந்தாலோசித்து பின்புதான் இருவரும் இந்த முடிவை மேற்கொண்டோம் .

எங்களை பிரபலங்களாக உருவாக்கிய உரிமையிலோ அல்லது என் தனிப்பட்ட வாழ்க்கை மீது தங்களுக்கு இருந்த பேரன்பின் வெளிப்பாடாகவோ தங்களின் ஆதங்கமான விமர்சனங்கள் இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களின் மனதை அது மிகவும் காயப்படுத்துகிறது என்பதை உணர்த்தவே இதை பதிவிடுகிறேன். ஒவ்வொரு தனி மனிதரின் நியாயமான உணர்வுக்கும் மதிப்பளியுங்கள். தங்களின் பேரன்புக்கும் ஆதரவுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in