
துபாயில் கார் ரேஸ் பயிற்சியின்போது நடிகர் அஜித் ஒட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளானது. இதில் எந்த ஒரு காயமும் இல்லாமல் அவர் தப்பினார்.
கார் ரேஸிங்கில் ஆர்வமுடைய நடிகர் அஜித் குமார் கடைசியாக 2010 ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றிருந்தார். இந்நிலையில், `அஜித்குமார் ரேசிங்’ என்கிற புதிய கார் ரேஸ் அணியைத் தொடங்கினார் அஜித்.
இது தொடர்பான அறிவிப்பையும், மேலும் பல தகவல்களையும் கடந்த 2024 செப்டம்பரில் பகிர்ந்துகொண்டார் அஜித் குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா. அஜித் குமார் ரேஸிங் அணி, `24 ஹெச் துபாய் 2025’ போட்டியிலும், `யுரோப்பியன் 24 ஹெச் சீரிஸ்’ சாம்பியன்ஷிப்பிலும் பங்கேற்கும் என அறிவிப்பில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், நடப்பாண்டிற்கான துபாய் கார் ரேஸ் போட்டியில் பங்கேற்பதற்காக நேற்று (ஜன.6) சென்னையில் இருந்து கிளம்பினார் அஜித். போட்டிக்குத் தயாராகும் வகையில் தீவிர பயிற்சியில் இன்று அவர் ஈடுபட்டுள்ளார். இந்தப் பயிற்சியின்போது, எதிர்பாராவிதமாக அஜித் ஓட்டிச் சென்ற கார் விபத்திற்குள்ளானது.
அதேநேரம் அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தால் அஜித்திற்கு எந்த காயம் ஏற்படவில்லை என்கிற தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து தொடர்பான காணொளி வெளியாகி, சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது.