
ரசிகர்கள் யாரும் சண்டை போட வேண்டாம் என அஜித் குமார் அறிவுரை வழங்கியுள்ளார்.
துபாயில் நடைபெறும் 24ஹெச் சீரிஸ் கார் பந்தயத்தில் அணி உரிமையாளர் மற்றும் ஓட்டுநராகப் பங்கேற்றுள்ளார் அஜித் குமார். இந்தப் போட்டிக்கு நடுவே அஜித் குமார் அவ்வப்போது பேட்டியளித்து வருகிறார்கள். கார் பந்தயத்தில் அஜித் குமார் பங்கேற்பதால், போட்டியைக் காண ஏராளமான ரசிகர்கள் குவிந்தார்கள். இதைப் பார்த்து அஜித் குமார் நெகிழ்ந்துபோனார். கார் பந்தயத்தை நடத்துபவர்களும் அஜித் குமாரின் ரசிகர்கள் மற்றும் அவர்களுடைய ஆதரவைப் பார்த்து வியந்துபோனார்கள்.
ரசிகர்களை அளவுகடந்து நேசிப்பதாகத் தெரிவித்த அஜித் குமார், ரசிகர்களுக்கென பிரத்யேகமாக வேண்டுகோள் விடுத்து அறிவுரை வழங்கியுள்ளார்.
"நிறைய ரசிகர்கள் நேரில் வந்துள்ளார்கள். இது மிகவும் உணர்ச்சிவயப்பட வைக்கிறது. ஆனால், ரசிகர்களுக்கு நான் சொல்லக்கூடியது ஒன்றுதான்.
நீங்கள் அனைவரும் சந்தோஷமாக, ஆரோக்கியமாக, மனநிம்மதியுடன் வாழ நான் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன். உங்களுடையக் குடும்பத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள். நன்றாகப் படியுங்கள். வேலைக்குச் செல்பவர்கள் கடுமையாக உழைத்து வேலை பாருங்கள். கடுமையாக உழையுங்கள்.
நமக்குப் பிடித்த விஷயங்களில் நாம் கலந்துகொள்கிறபோது, வெற்றி பெற்றால் நல்ல விஷயம். ஆனால் வெற்றியடையாத பட்சத்தில் சோர்ந்துவிடாதீர்கள். போட்டியில் பங்கெடுப்பது முக்கியம். மனஉறுதியையும் அர்ப்பணிப்பையும் விட்டுக் கொடுக்காதீர்கள். உங்கள் அனைவரையும் நான் நேசிக்கிறேன், அளவுகடந்து நேசிக்கிறேன்.
ரசிகர்கள் யாரும் சண்டை போட வேண்டாம். வாழ்க்கை மிகச் சிறியது. சந்தோஷமாக இருங்கள். உங்களுடையக் குடும்பத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள்" என்றார் அஜித் குமார்.