

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு ‘ஒருவர்’ மட்டுமே பொறுப்பாக முடியாது என்று நடிகர் அஜித் குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் புகழ்பெற்ற நடிகரான அஜித் குமார் தற்போது அதிகமாக உலகச் சுற்றுலாவிலும் கார் பந்தயங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் கூட ரசிகர்களால் அன்புடன் தல என்று அழைக்கப்படுவதை மறுத்த அவர், அஜித் குமார் என்ற தன் பெயரையோ ஏகே என்றோ அழைக்குமாறு கேட்டுக் கொண்டார். அவ்வப்போது அவரைப் பொதுவெளியில் காணும் ரசிகர்கள் உற்சாகத்துடன் கூச்சலிடும்போது அதை அவர் அமைதியுடன் கண்டிக்கும் காணொளிகளும் பரவி வருகின்றன.
இந்நிலையில் பொதுவாக எந்தவொரு அரசியல் நிகழ்வுக்கும் கருத்து தெரிவிக்காமல் இருந்து வரும் அஜித் குமார், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்த தன் கருத்தைப் பதிவு செய்துள்ளார். தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் என்ற ஆங்கில ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், கரூர் சம்பவத்திற்கு ஒருவர் மட்டுமே பொறுப்பல்ல என்று பேசியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
“தமிழ்நாட்டில் இப்போது நிறைய நடந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில் கூட கூட்ட நெரிசல் சம்பவம் நடந்தது. அதற்கு அந்த ஒருவர் மட்டும்தான் பொறுப்பு என்று நான் சொல்லமாட்டேன். நாம் அனைவருமே பொறுப்புதான். ஊடகத்திற்கும் பெரும் பங்கு உண்டு. இன்று கூட்டத்தைக் கூட்டி நம் பலத்தைக் காட்ட வேண்டும் என்று முனைப்புடன் இருக்கும் சமூகமாக நாம் மாறியிருக்கிறோம். இதெல்லாம் முடிவுக்கு வர வேண்டும்.
கிரிக்கெட் பார்க்கக் கூடத்தான் கூட்டம் வருகிறது. ஆனால் அங்கு இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடப்பதில்லையே. ஏன் இது சினிமாவைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் நடக்கிறது? இது ஒட்டுமொத்த திரைத்துறையையே தவறான கண்ணோட்டத்தில் பிரதிபலிக்கிறது. ஹாலிவுட் நடிகராகவே இருக்கட்டுமே, நாங்கள் இதை விரும்பவில்லை. எங்களுக்கு ரசிகர்களின் அன்பு வேண்டும். அதற்காகத்தான் நாங்கள் உழைக்கிறோம். குடும்பங்களை விட்டுத் தூரமாக வந்து, படங்களுக்காக உழைத்து, அதில் காயப்பட்டு, மன உளைச்சல்களுக்கு ஆளாகி, உறக்கமின்மைக்குள் தள்ளப்பட்டு மக்களின் அன்பைப் பெறுவதற்காகவே உழைக்கிறோம். ஆனால் அன்பை வெளிப்படுத்த பல வழிகள் உண்டு.
முதல்நாள் முதல் காட்சிக்கு வரும் கூட்டம் போன்றவற்றை ஊடகங்கள் ஆதரிக்கக் கூடாது. வாக்குச்சாவடியில் வாக்களிக்கும்போது கூட கேமராக்களுடன் நிற்கிறார்கள். அதைப் பார்த்துப் பலர் அச்சப்படுகிறார்கள். இது ஒட்டுமொத்த தோல்வி என்றே சொல்வேன். கரூர் சம்பவத்திற்குத் தொடர்புள்ள அந்த ஒருவரது தோல்வி மட்டும் கிடையாது. நாமெல்லாம்தான் பொறுப்பு. என்னை உட்பட. கூட்டத்தைக் கூட்டுவது மூலம் நமது பலத்தைக் காட்ட நினைக்கும் வெறியை நாம் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.
145 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் கூட்டத்தைக் கூட்டுவது என்பது பெரிய சாதனை அல்ல. நான் சட்டத்தையும் ஜனநாயகத்தையும் மதிக்கிறேன். இன்று எல்லாரும் நாட்டை ஆள நினைக்கிறார்கள். நான் வளர்ந்த காலத்தில் எங்கு பார்த்தாலும் உரிமை உரிமை என்று பேசினார்கள். எப்போது நாம் கடமைகளைப் பற்றிப் பேசப்போகிறோம்? என்னிடம் இந்தக் கேள்வி கேட்கப்பட்டதால் நல்லெண்ணத்தில் இதைப் பகிர்கிறேன். இல்லாவிட்டால் இதைப் பற்றியெல்லாம் நான் பேசியிருக்க மாட்டேன்” என்று பேசியுள்ளார்.
Actor Ajith Kumar has stated that "One person is not the only person to blame for the Karur Stampede" during an interview given to an English media.